
87 உறுப்பினர்களைக் கொண்ட காஷ்மீர் சட்டப்பேரவைக்கு
2014 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் எந்தஒரு அரசியல் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
மெகபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சி 28, பா.ஜனதா 25, தேசிய மாநாடு கட்சி 15, காங்கிரஸ் 12 இடங்களை கைப்பற்றின. இதர கட்சிகள் 7 தொகுதிகளில் வெற்றி பெற்றன.
யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் மக்கள் ஜனநாயக கட்சியும், பா.ஜனதாவும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தன. மெகபூபா முப்தி முதல்வர் ஆனார். ஆனால் கடந்த ஜூன் மாதம் அவருக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக விலக்கிக் கொண்டது.
இதைத்தொடர்ந்து மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இதையடுத்து காஷ்மீரில் ஆட்சியமைக்க பாஜக நடவடிக்கை மேற்கொண்டது. சட்டமன்ற உறுப்பினர்களை இழுக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக பாஜக மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதை முறியடிக்கும் விதமாக கடந்த சில நாட்களாக மக்கள் ஜனநாயக கட்சியும், காங்கிரசும் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. இதில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான திட்டம் அண்மையில் வகுக்கப்பட்டது.
காஷ்மீரில் திடீர் திருப்பமாக மக்கள் ஜனநாயக கட்சி, காங்கிரஸ், தேசிய மாநாடு கட்சிகள் ஆகியன இணைந்து கூட்டணி அரசை அமைக்க உள்ளது.
இவற்றில் மஜக வும் தேமாகவும் தமிழகத்தில் திமுக அதிமுக போல் நேரெதிர் கட்சிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து தன் ட்விட்டரில் மெஹ்பூபா முப்தி கூறியிருப்பதாவது, “இந்த ஆட்சியமைக்க உரிமை கோரும் கடிதத்தை கவர்னர் மாளிகைக்கு அனுப்ப முயற்சி செய்து கொண்டிருக்கிறேன், விசித்திரமாக இந்த பேக்ஸ் அங்கு பெறப்படவில்லை. கவர்னரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சி செய்கிறேன் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.” என்று ஒரு ட்வீட்டிலும் “மெயிலிலும் இந்தக் கடிதத்தை அனுப்புகிறேன்” என்று இன்னொரு ட்வீட்டிலும் மெஹ்பூபா முப்தி தெரிவித்துள்ளார்.
பா.ஜனதாவிற்கு எதிராக மகா கூட்டணியாக அனைத்து கட்சிகளும் ஒன்றாக இணைந்த நிலையில் அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் சட்டசபையைக் கலைத்து உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக பலமுறை தேசிய மாநாட்டு கட்சி சட்டசபையை கலைக்க கோரிய போது எந்தஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இப்போது கூட்டணி என்றதும் பேரவை கலைக்கப்பட்டுள்ளது.
பாஜகவுக்கு எதிராக எல்லாக்கட்சிகளும் ஒருங்கிணைந்ததும் பாஜக பயந்துவிட்டது என்றும் அதனாலேயே அப்பட்டமான இந்த சன்நாயகப் படுகொலையைச் செய்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் விமர்சிக்கின்றனர்.


