தமிழில் பேச முடியவில்லை-கோ.செழியன் வேதனை


தமிழ் மொழி, பாரம்பரிய சொற்களை தொடர்ந்து இழந்து வருகிறது என்று தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குநர் (நிர்வாகம்) கோ.செழியன் வேதனை தெரிவித்தார்.

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்சிமொழிப் பயிலரங்கை தொடங்கிவைத்து அவர் பேசியதாவது:

தமிழ் அச்சு ஊடகங்களில் கடந்த 2 நாள்களாக வந்த இரண்டு செய்திகள் நமக்கு பாடம் கற்றுத்தருவது போல உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் மருத்துவக் கல்விóப் பாடத்திட்டத்தை பஞ்சாபி மொழியில் உருவாக்க 60 மருத்துவர்கள் கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது என்பது முதல் செய்தி. ஹிந்தியை தாய்மொழியாக கொண்ட வடமாநிலத்தை சேர்ந்த பாஜக எம்பி தருண் விஜய், தமிழ் மற்றும் திருக்குறளின் சிறப்புகளை உலகம் அறிய செய்யப் போவதாக அறிவித்துள்ளார் என்பது மற்றொரு செய்தி.

நாம் மனதில் எண்ணுவதை முழுமையாக தமிழில் பேச முடியவில்லை. பிறமொழிகளை கலந்து பேசுவதால் தமிழில் உள்ள பாரம்பரிய சொற்கள் தொடர்ந்து மறைந்து வருகின்றன. ஜன்னல் என்ற சொல் இப்போது புழக்கத்தில் உள்ளது. இது போர்த்துகீசிய சொல் ஆகும்.

அந்த சொல்லுக்கு பதிலாக சாளரம் உள்பட 8 சொற்கள் உள்ளன. ஆனால், அவற்றை நாம் மறந்துவிட்டோம். இதுபோல நாம் இழந்த சொற்கள் ஏராளம்.

ஈரோடை என்ற சொல் ஈரோடு என்றும், ஒற்றைக்கல் மந்தை என்ற சொல் உதக மண்டலம் என்றும், பொருள் ஆச்சி என்பது பொள்ளாச்சி ஆகவும், தகடூர் என்பது தருமபுரியாகவும், கருமலை என்பது கிருஷ்ணகிரியாகவும், நீலமலை என்பது நீலகிரியாகவும் மாறிவிட்டன.

தமிழும், வடமொழியும் இணைந்து உருவானது தான் மலையாளம். அங்கு மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் என மும்மொழி கொள்கை அமல்படுத்தப்பட்டும் இதுவரை மலையாளத்தில் பிறமொழி கலப்பு ஏற்படவில்லை. ஆனால், தமிழில் ஆங்கில மொழி கலப்பு அதிகமாக உள்ளது. இதை தவிர்க்க நாம் முயற்சி செய்ய வேண்டும் என்றார்.

இப்பயிலரங்கில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வெ.கஸ்தூரி, தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் முனைவர் ப.அன்புச் செல்வன் மற்றும் அனைத்துத்துறை அதிகரரிகள் பங்கேற்றனர்.

Leave a Response