துடைப்பத்துடன் தெருவில் இறங்கிய திருப்பூர் எம் பி – மக்கள் பாராட்டு

சமூகம் மற்றும் தனிமனிதருக்கு மருத்துவர்கள் செய்யும் சேவையை அங்கீரிக்க உருவாக்கப்பட்டது தேசிய மருத்துவர்கள் தினம் (National Doctors’ Day).

இந்த நினைவு நாள் கொண்டாடப்படும் தேதி காரணங்களைப் பொறுத்து நாட்டுக்கு நாடு மாறுபடுகிறது. சில நாடுகள் இதை விடுமுறை தினமாகவும் அறிவிக்கிறது. பெரும்பாலும் மருத்துவ நிறுவனங்களே இத்தினத்தைக் கொண்டாடுகின்றன.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சூலை திங்கள் முதல் தேதியை தேசிய மருத்துவர்கள் நாளாகக் கொண்டாடகின்றனர். 1991 ஆம் ஆண்டு முதல் இது கொண்டாடப்பட்டு வருகிறது.

வரலாற்றுப் புகழ்மிக்க மருத்துவரும் மேற்கு வங்காளத்தின் இரண்டாவது முதலமைச்சருமான மருத்துவர் பிதான் சந்திர ராய் நினைவாக தேசிய மருத்துவர்கள் நாள் கொண்டாடப்படுகிறது.

1882 சூலை திங்கள் முதல் தேதி பிறந்த அவர், சரியாக 80 ஆண்டுகள் கழித்து அதே தேதியில் மறைந்தார். இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை 4, பிப்ரவரி 1961 ஆம் ஆண்டு பெற்றார். இவரின் நினைவாகவும், மருத்துவர்களின் சேவையைப் பாராட்டவும் இந்நாளானது இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.

இந்நாளையொட்டி திருப்பூர் தொடர்வண்டி நிலையத்தில் ஐ எம் ஏ திருப்பூர் கிளை, ஶ்ரீ சக்தி பில்டர்ஸ் முயற்சி மக்கள் அமைப்பு ஆகிய அமைப்புகளும் சிக்கண்ணா கல்லூரி மாணவ, மாணவியரும் இணைந்து தூய்மைப் பணிகளை மேற்கொண்டனர்.

இந்நிகழ்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்தார் திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் சத்யபாமா.தூய்மையோடு பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாகத் துணிப்பைகள் பயன்படுத்தவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

நிகழ்ச்சியில் கைகளில் துடைப்பத்தோடு நின்று அனைவரும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். அவர்களோடு படமெடுத்த சத்யபாமா, அதோடு நில்லாமல் துடைப்பத்தை வாங்கி தெருவைக் கூட்டிப் பெருக்கத் தொடங்கிவிட்டார்.

சம்பிரதாயமாக நடந்து கொள்ளாமல் களத்தில் இறங்கி செயல்பட்ட அவருக்குப் பாராட்டுகள் குவிகின்றன.

Leave a Response