ஸ்டெர்லைட் ஆலையை ஒரேநாளில் மூட மன்சூர் அலிகான் சொல்லும் யோசனை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு மக்கள் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய் பாதித்து அவதிப்படுகின்றனர். இதனால் அந்த ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆலையைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு அருகில் உள்ள அ.குமரெட்டியாபுரம் கிராமமக்கள் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது போராட்டம் இன்று 83 ஆவது நாளை எட்டியுள்ளது. அவர்களது போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் சார்பில் அதன் தலைவர் தமிழ் மாந்தன் தலைமையில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகே இன்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

1. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்,
2. ஸ்டெர்லைட் ஆலையால் புற்றுநோய் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும்,
3.சுற்றுச்சூழல் பாதிப்புக்கு காரணமாக ஸ்டெர்லைட் நிறுவன தலைவர் மற்றும் உயர் அதிகாரிகளைக் கைது செய்ய வேண்டும்,
4.தூத்துக்குடி மக்களின் உடல் நிலையைக் கண்டறிய சிறப்பு மருத்துவகுழு அமைக்க வேண்டும்,
5. ஸ்டெர்லைட்ஆலைக்கு ஆதரவாக இருந்து வந்த மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்

உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடந்தது.

இதில் தூத்துக்குடி நகர்பகுதி மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினர், பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

நடிகர் மன்சூர் அலிகானும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டார்.

அதில் பேசிய அவர்,நான் ஒரு நடிகராகவோ, அரசியல் கட்சி சார்ந்தோ இங்கு வரவில்லை. தன் பெயர் கூட சரியாக சொல்லத்தெரியாத சிறு குழந்தை, முகேஷ் “ஸ்டெர்லைட்டை விரட்ட வேண்டும்” எனக் கோஷம் போடுகிறான். இதுவே ஒட்டுமொத்த மக்களின் குரல். இந்த ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடி மக்களுக்கான பிரச்னை மட்டும் இல்லை. ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கான பிரச்னை. போபாலில் விஷவாயு தாக்கி எத்தனை லட்சம் பேர் இறந்தார்கள். இன்னும் அங்கு பல லட்சம் பேர் ஊனமாக வாழ்ந்து வருகிறார்கள். அந்த நிலைமை இங்கும் நடைபெறும் அபாயம் ஏற்படும். இதனைத் தவிர்க்க, உடனடியாக இந்த ஆலையை இழுத்து மூட வேண்டும்.

24 ஆண்டுகளாக தொடர்ந்து தற்போது வரை ஆலை நிர்வாகம் பல ஆயிரம் கோடி பணம் சம்பாதித்தது போதும். இனி மூட்டை மூடிச்சுகளோடு கிளம்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்த ஆலையைச் சுற்றி உள்ள 10 கிராமங்களின் மொத்த மக்கள் தொகை 10 லட்சம் என்றால், அதில் கடந்த 23 ஆண்டுகளில் புற்றுநோயால் இறந்தவர்கள் எத்தனை பேர், புற்று நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள் எத்தனை பேர் இன்னும் எந்தெந்த நோய்களி்ல் எத்தனை பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என கணக்கெடுக்கப்பட வேண்டும். அவர்களுக்கான இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட வேண்டும். சாதி, மத, அரசியல் பாகுபாடற்று அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து ஆலையை மூட வலியுறுத்திப் போராடினால் நிச்சயம் ஒரே நாளில் மூடி விடலாம். நாம் தமிழர் கட்சியும் கடந்த 10 வருடங்களாக இந்த கோரிக்கையைத்தான் வலியுறுத்தி வருகிறது

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Response