
வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்துக்கு எதிரான உச்சநீதிமன்றத் தீர்ப்பைச் செயலிழக்க செய்ய உடனடியாக அவசரச் சட்டம் இயற்ற வேண்டும். அந்தச் சட்டத்தை அரசியலமைப்புச் சட்டத்தின் 9-வது அட்டவணையில் இணைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சென்னையில் ஆளுநர் மாளிகை நோக்கிப் பேரணியாகச் செல்வதாக அறிவித்தனர்.
ஆனால் அதற்கு அனுமதி தரவில்லை. எனவே, சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே ஏப்ரல் 24 மாலை போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங், புரட்சி பாரதம் தலைவர் பூவை எம்.ஜெகன்மூர்த்தி, இந்திய குடியரசுக் கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் பெ.ஜான்பாண்டியன், ஆதித்தமிழர் மக்கள் கட்சி தலைவர் எஸ்.டி.கல்யாணசுந்தரம் உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
போராட்டத்தில் தொல்.திருமாவளவன் பேசியதாவது…
வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றம் அளித்து இருக்கிற தீர்ப்பை உடனடியாக செல்லாததாக்க அவசரச் சட்டம் இயற்ற வேண்டும். எந்தக் காலத்திலும் நீதிமன்றம் சீண்டாதபடி அந்தச் சட்டத்தை இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 9-வது அட்டவணையில் இணைக்க வேண்டும்.
வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உடனடியாக நடைமுறைப்படுத்தி இருக்கிறார்கள். பா.ஜ.க. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை ஓட்டுக்காக நிறைவேற்றினார்கள். தற்போது உச்சநீதிமன்றத்தைத் தூண்டிவிட்டு அதைச் செயலிழக்க செய்து இருக்கிறார்கள்.
எங்களுடைய கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றாவிட்டால் ஒடுக்கப்பட்ட மக்கள் மாபெரும் சக்தி என்பதை நிலைநாட்டுவோம். வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்தால் தலித் மக்கள் சக்தி உள்நாட்டு யுத்தமாக மாறும். அம்பேத்கர் சொன்ன மக்கள் புரட்சி வெடிக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
சைதாப்பேட்டையில் நடந்த போராட்டத்தால் அந்தப் பகுதி முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன.
இந்த நேரத்தில் அப்பகுதியில் தானியில் பயணம் செய்த நடிகை கஸ்தூரி போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்பட்டார். அதனால், பொதுமக்களைத் தொந்தரவு செய்யும் விதமாக இப்படி போராட்டம் நடத்துவது சரியில்லை என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
உடனே அதற்குக் கடும் எதிர்ப்புகள் வந்திருக்கின்றன.


