காவிரி உரிமை மீட்புப் பயணம் – முதல் நாள் நிகழ்வுகள்

காவிரி நதிநீர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தி.மு.க. சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

தி.மு.க. மற்றும் தோழமைக் கட்சிகள் சார்பில்,ஏப்ரல் 5 ஆம் தேதி முழு அடைப்புப் போராட்டம் நடந்தது.

இதன் தொடர்ச்சியாக, திருச்சியில் இருந்து கடலூர் வரை காவிரி உரிமை மீட்புப் பயணத்தை நடத்த தி.மு.க. சார்பில் அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

காவிரியில் தமிழகத்திற்கு உள்ள உரிமையை மீட்டெடுக்க காவிரி உரிமை மீட்புப் பயணம் இரண்டு குழுக்களாக மேற்கொள்ள இருக்கிறது. திருச்சி முக்கொம்பிலும், வருகிற 9-ந் தேதி அரியலூரிலும் இந்தப் பயணம் தொடங்கி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதற்காக திருச்சி முக்கொம்புவில் இருந்து தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், காவிரி உரிமை மீட்புப் பயணத்தினை நேற்று தொடங்கினார்.

முதல்நாள் பயணத்தில் நடந்த நிகழ்வுகள் பற்றி மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது…

திருச்சி முக்கொம்பு பகுதியில் காவிரி உரிமை மீட்புப் பயணத்தின் அடையாளமாய் கொடியேற்றத்துடன் துவங்கிய முதல் நாளில், ஜீ.ஏ.புரம், முத்தரசநல்லூர், திருச்சி சத்திரம் பேருந்து நிலையம், சேங்கூர் வழியாக கல்லணையை அடைந்தோம். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் மத்திய மாநில அரசுகள் தமிழகத்திற்குச் செய்த துரோகமும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து தமிழக விவசாயிகளை காப்பாற்ற வேண்டுமென்கிற எண்ணமும் வழி நெடுக இருக்கின்ற மக்களிடத்தில் இருப்பதை உணர முடிகிறது.

அனைத்துக் கட்சித் தலைவர்களும் கலந்துகொண்ட இந்த காவிரி உரிமை மீட்புப் பயணத்தின் முதல் நாள் நிறைவாக கல்லணையில் விவசாயப் பெருமக்களைச் சந்தித்துப் பேசினேன்.

அவர்களிடத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை நாங்கள் ஓய மாட்டோம் என்றும், தொடர்ந்து தமிழர்களின் உரிமைகளைப் பறிக்கின்ற இதுபோன்ற செயல்களைத் தட்டிக் கேட்க அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இன்று (ஏப்ரல் 8) 2 ஆவது நாளாக தஞ்சை சூரக்கோட்டையில் இருந்து மு.க.ஸ்டாலின் நடைபயணத்தினைத் தொடங்கியுள்ளார். இதில் திருநாவுக்கரசர், முத்தரசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

அவர் இந்த பயணத்தில் பட்டுக்கோட்டை, கோவிலூர், நம்பிவயல், வாண்டையார் குடியிருப்பு வரை செல்கிறார்.

Leave a Response