மன்னர் பரம்பரையைச் சேர்ந்த இரண்டு குடும்பங்களுக்கான போட்டியை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படம் மன்னர்வகையறா.
முழுநீள நகைச்சுவைப் படத்தில் அங்கங்கே சில பாசக்காட்சிகளையும் சில அதிரடி சண்டைகளையும் அக்மார்க் கமர்ஷியல் படத்தைக் கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் பூபதிபாண்டியன்.
பக்கத்துவூட்டுப் பையன் போலவே இருந்த விமல் இந்தப்படத்தில் முழுமையான ஆக்ஷன் ஹீரோவாக நடிக்க நான் தகுதியானவன்தான் என்பதை நிரூபித்திருக்கிறார். தாமே எல்லாக் காட்சிகளிலும் நிறைந்திருக்க வேண்டும் என்று நினைக்காமல், அண்ணனாக நடித்திருக்கும் கார்த்திக்குமார், மாமாவாக நடித்திருக்கும் ரோபோசங்கர், காதலி கயல்ஆனந்தி ஆகியோரை நடிக்கவிட்டு ரசித்திருக்கிறார்.
அப்பாவிப் பெண்ணாக கயல் படத்தில் வரும் ஆனந்தி, இந்தப்படத்தில் முதல்பாதியில் கலகலப்பாகவும் இரண்டாம்பாதியில் அதற்கு நேரெதிராக அடக்கமும் அமைதியுமாய் நடித்து வரவேற்புப் பெறுகிறார்.
பிரபு,சரண்யாபொன்வண்ணன், ஜெயப்பிரகாஷ், சிங்கம்புலி, வம்சி, நீலிமா உள்ளிட்டு நிறைய நடிகர்கள் படத்தில் இருக்கிறார்கள். எல்லோரும் அவரவர் வேலையைச் சரியாகச் செய்திருக்கிறார்கள்.
மாரி தனுஷ் மாதிரி வந்து அதகளம் செய்யும் ரோபோசங்கர் பல இடங்களில் சிரிக்கவைக்கிறார்.
எவ்வளவு நவீனங்கள் வந்தாலும் குடும்ப அமைப்புகள் மாறாது என்று இந்தப்படம் சொல்கிறது.
பாடல்கள் ஓகே ரகம். கட்டாயக் கவிஞர் பூபதிபாண்டியன் எழுதியுள்ள
அண்ணனும் வேண்டாம் பாடலில் ஆனந்தியின் முழுப்பரிமாணம் தெரிகிறது.
அதிகம் யோசிக்காமல் குடும்பத்தோடு போய்ச் சிரித்துவிட்டு வரலாம்.