‘குற்றப்பரம்பரை’க்காக மன்னிப்பு கேட்ட ‘தீரன்’ படக்குழு..!


கடந்த வாரம் கார்த்தி நடிப்பில் வெளியான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. சதுரங்க வேட்டை’ ஹெச்.வினோத் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். வடமாநில கொள்ளையர்களை அவர்கள் இடத்திற்கே சென்று வேட்டையாடும் தீரமிக்க போலீஸ் அதிகாரியாக கார்த்தி நடித்துள்ளார்.

இந்தப்படத்தில் கொள்ளையர்கள் சம்பந்தமாக போலீசாராலும், அரசாங்காத்தாலும் புழங்கப்படும் ‘குற்றப்பரம்பரை’ என்கிற வார்த்தையை சில காட்சிகளில் பயன்படுத்தி இருந்தார்கள்.. ஆனால் ஒரு தரப்பினரிடம் இருந்து இதற்கு ஆட்சேபம் எழுந்தது. அதனால் சம்பந்தப்பட்ட வார்த்தையை நீக்குவதாக படக்குழு அறிவித்துள்ளது.. இதுகுறித்து அவர்கள் வருகை ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்.

“இந்தியாவின் பல மாநிலங்களில் நடந்த கொள்ளைச் சம்பவங்களை வைத்து மட்டுமே இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு குறிப்பிட்ட இனத்தையும் தவறாக ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் சித்தரிக்கவில்லை. எந்த ஒரு சமுதாயமும் கொலை, கொள்ளையை குலத்தொழிலாக கொண்டு வாழவில்லை. அப்படி ஒரு சித்தரிப்பு இப்படத்தில் காட்டப்படவில்லை. இருப்பினும் மக்கள் மனம் புண்படும்படி இருப்பதாகக் கருதுவதால், அதற்காக ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படக்குழு சார்பாக மன்னிப்புக் கேட்டுக் கொள்வதோடு, வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். இனிவரும் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் இணையதள ஒளிபரப்பு ஆகியவற்றிலிருந்து குற்றப்பரம்பரை என்ற சொல் மற்றும் புத்தக காட்சி நீக்கப்படும் என தெரிவித்துக் கொள்கிறோம்” என அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response