தேர்தல் ஆணையம் மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டது – சான்றுகளுடன் ஈ.ஆர்.ஈஸ்வரன் குற்றச்சாட்டு

ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வரும் டிசம்பர் 21 ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நவம்பர் 27 ஆம் தேதி துவங்குகிறது. வேட்பு மனுவை தாக்கல் செய்ய டிசம்பர் 4 ஆம் தேதி கடைசி நாளாகும். டிசம்பர் 5 ஆம் தேதி வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்ப பெற 7 ஆம் தேதி கடைசி நாளாகும்.

டிசம்பர் 24 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் இன்று முதல் அமலுக்கு வந்திருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு கடும் விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறது. கொங்குநாடுமக்கள் தேசியக்கட்சியின் பொதுச்செயலர் ஈ.ஆர்.ஈஸ்வரன் இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….

ஓட்டுக்குப் பணம் கொடுத்ததால் நிறுத்தப்பட்ட ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் மீண்டும் நடக்கும் போது பணம் கொடுக்கப்படாது என்பதற்கான தேர்தல் ஆணையத்தின் திட்டம் என்ன ?.

ஒரு வருட காலமாகக் காலியாக இருந்த ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதிக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி. கடந்த முறை ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தலில் ஓட்டுகளுக்கு பணம் அதிகமாக கொடுக்கப்பட்டது என்பதை முன்னிறுத்தித் தான் கடைசி நேரத்தில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

தற்போது தேர்தல் நடந்தால் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கப்படாது என்பதற்கான உத்தரவாதம் என்ன இருக்கிறது? நடக்கப்போகின்ற இடைதேர்தலில் வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்யப்பட்டால் அதைத் தடுப்பதற்கு இப்படிப்பட்ட திட்டங்களை வைத்திருக்கிறோம் என்று தேர்தல் ஆணையம் மக்களுக்கு அறிவிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது.

இப்போது ஆர்.கே.நகர் தொகுதியில் இருக்கின்ற எந்தவொரு வாக்காளனைக் கேட்டாலும் ஓட்டுக்குப் பணம் கொடுப்பார்கள் என்றுதான் உறுதியாகச் சொல்வார்கள். என்ன காரணத்திற்காக தேர்தல் நிறுத்தப்பட்டதோ அதை நிவர்த்தி செய்வதற்கு எந்தவொரு நடவடிக்கைகளும், திட்டங்களும் இல்லாமல் தேர்தல் தேதி அறிவித்திருப்பது வருத்தமளிக்கிறது.

வாக்களிக்கின்ற மக்களிடத்தில் செயல்படப் போகும் விதத்தைச் சொல்லி நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை.

2016-ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலின் போது அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் ஓட்டுக்குப் பணம் கொடுக்கப்பட்டது என்று காரணம் காட்டி தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. மீண்டும் அந்த இரண்டு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடந்தபோது பொதுத்தேர்தலில் கொடுக்கப்பட்ட பணத்தை விட அதிகமாகக் கொடுக்கப்பட்டது. அதைத் தடுக்க தேர்தல் ஆணையம் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

உண்மைநிலை அப்படி இருக்கும் போது ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மீண்டும் பணம் கொடுக்கப்படாது என்பதற்கான தேர்தல் ஆணையத்தின் திட்டங்கள் என்ன ? சென்ற தேர்தலில் கொடுத்ததை விட ஓட்டுக்கு அதிகப் பணம் கொடுக்கப்படும் என்பது தான் எதார்த்தம். இப்படிப்பட்ட செயல்பாடுகளால் தான் தேர்தல் ஆணையம் மக்களுடைய நம்பிக்கையை இழந்து கொண்டிருக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response