யூகன் படம் மூலம் தமிழ்ரசிகர்களை மிரட்டவருகிறது சாக்சி எனும் புதிய பேய்


பலபடங்களில் படத்தொகுப்பாளராகப் பணியாற்றிய கமல்குமார் இயக்கியிருக்கும் முதல்படம் யூகன். இந்தப்படத்தை அவரே தயாரிக்கவும் செய்கிறார். அடுத்து என்ன நடக்கும் என்பதை யூகிக்கக்கூடியவன் என்கிற பொருளில்தான் யூகன் என்று படத்துக்குப் பெயர் வைத்திருக்கிறார்கள். இந்தப்படத்தில் நாயகனாக யாஸ்மித் என்பவரும் நாயகியாக சாக்சிஅகர்வாலும் நடித்திருக்கிறார்கள். யாஸ்மித்தும் படத்தொகுப்பாளராகப் பணியாற்றியவர். சில ஆண்டுகளாக நடிக்க விருப்பம் கொண்டிருந்த அவரை இந்தப்படத்தின் நாயகனாக்கியிருக்கிறார் இயக்குனர் கமல்குமார்.
மென்பொருள் நிறுவனங்களில் நடக்கும் சிக்கல்களை மையப்படுத்தி இந்தப்படத்தின் கதை எழுதப்பட்டிருக்கிறதாம். அந்தத்துறையில் பணியாற்றக்கூடிய ஐந்துபேரின் எண்ணங்களை மையமாகக்கொண்டு திரைக்கதை எழுதப்பட்டிருக்கிறதாம். நகைச்சுவை, காதல் ஆகிய அம்சங்களோடு திகிலுக்கும் இந்தப்படத்தில் முக்கியத்துவம் இருக்கிறதாம். சாக்சி நாயகியாக மட்டுமின்றி பேயாகவும் வந்து பயமுறுத்தவிருக்கிறாராம். மொத்தம் அறுபதுநாட்கள் படப்பிடிப்பு நடந்திருக்கிறது. இதில் ஐம்பத்தைந்துநாட்கள் இரவிலேயே படப்பிடிப்பு நடந்ததாம்.
படத்தொகுப்பாளரான நானே இயக்குவதால் படப்பிடிப்பின்போது திட்டமிட்டுக் காட்சிகளை எடுத்திருக்கிறேன் என்று சொல்கிறார் இயக்குநர் கமல்குமார். முழுக்க முழுக்க புதியவர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப்படம் நிச்சயம் புதியஅதிர்வுகளை உண்டாக்கும் என்று நம்பிக்கையும் கொடுக்கிறார்.
ரவிஆறுமுகம் என்பவர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ரசாந்த்அர்வின் என்பவர் பாடல்கள் போட்டுக்கொடுக்க அலெக்ஸ்பிரேம்நாத் பின்னணிஇசை அமைத்திருக்கிறார். படத்தில் மொத்தம் மூன்றுபாடல்களாம். முருகன்மந்திரம், பிரபு, அரவிந்த்கண்ணா ஆகியோர் பாடல்களை எழுதியிருக்கிறார்கள்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அதற்குப் பிறகான வேலைகளும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகிவிட்டதாம். படத்தைப் பார்த்த அபிராமிராமநாதன் படம் பிடித்திருப்பதால் தானே வெளியிட ஒப்புக்கொண்டிருக்கிறாராம். ஏப்ரலில் படம் வெளியாகிவிடும் என்று சொல்கிறார்கள்.
அண்மைக்காலமாக பேய்ப்படங்களுக்கு வரவேற்பு கிடைக்கிறது. வரவேற்புப் பெற்ற பேய்ப்படங்களுக்கு முன்பே இவர்கள் படத்தைத் தொடங்கிவிட்டாலும் அவற்றிற்குப் பின்னால் திரைக்கு வரவிருக்கிறார்கள்.

Leave a Response