விழித்திரு -விமர்சனம்


விழி… விழித்திரு…விழித்தேயிரு….

எந்தொரு பெருநகரத்திலும் ஓர் இரவில் நடந்துவிடுவதற்கான சாத்தியங்கள் கொண்ட நான்கு கதைகள் இப்படத்திற்காக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பிட்ட அவ்விரவில் நகரத்தின் வெவ்வேறு பகுதிகளில் ஒன்றுக்கொன்று தொடர்பற்று தற்செயலாக நடந்துகொண்டிருக்கும் அநேகக் கதைகளையும் இந்நான்கு கதைகளுக்குள்ளாக பொதித்துச் சொல்லத் தோதான ஒரு சட்டகத்தை வடிவமைத்திருக்கும் இயக்குநர் நம்மையும் அதற்குள் லாவகமாக இழுத்துப்போட்டுவிடுகிறார். இந்த நான்கு கதைகளும் தத்தமது அளவில் சுயேச்சையாகவும் அதேவேளையில் ஒன்றையொன்று வெட்டி அல்லது ஊடறுத்துச் செல்லும் பாங்கிலும் சொல்லப்படுகின்றன. நான்கிலும் வெவ்வேறு வாழ்வியல் பின்புலம் கொண்ட கதைமாந்தர்கள். இவர்கள் எவ்வித முனைப்பும் நோக்கமுமின்றி அவரவர்க்கான நியாயத்தின் உந்துதலில் அடுத்தவர் வாழ்வில் குறுக்கிடுகிறார்கள். அதன்மூலம் தவிர்க்கமுடியாமல் ஏற்படும் மாற்றங்கள் விளைவுகளுக்கு யார் பொறுப்பேற்பது என்கிற கேள்வியை எழுப்பி அதற்கு அவர்களனைவரையுமே கூட்டாக பொறுப்பேற்கச் செய்கிறது படம்.

நமது அன்றாடத்தின் ஒரு துண்டுதான் திரையில் பிறரது வாழ்க்கையாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்று நம்பிக்கொள்ளும் அளவுக்கு இந்த நான்கு கதைகளுமே சமகாலப் பிரச்னைகளை நேரடியாகப் பேசுகின்றன. இவற்றில் புனைவு என்பது பெயர்கள் மட்டும்தானேயன்றி காட்டப்படும் வாழ்க்கை நம் ஒவ்வொருவருக்குமானது. எனவே வேறொரு மாநில / நாட்டின் மொழிக்கு மாற்றி இப்படத்தை திரையிடும் பட்சத்தில் அதை அந்த மக்கள் தங்களின் வாழ்வாக காணக்கூடும். ஓராண்டுக்கு முன்பே எடுத்து முடிக்கப்பட்டுவிட்ட இப்படத்தின் கதாபாத்திரம் ஒன்றை, சமீபத்தில் சில மாதங்களுக்கு முன்பு சந்தேகத்திற்குரிய வகையில் கைதுசெய்யப்பட்டு சந்தேகத்திற்குரிய வகையிலேயே செத்தும் போன ராம்குமாருடன் ஒப்பிட்டுப் பார்க்கத்தோன்றும். ஆமாம், அரச பயங்கரவாதத்தை உன்னிப்பாக கவனித்துவரும் இயக்குனரின் கலைமனம், அப்பாவிகளின் சாவுகளை முன்னுணர்ந்து சொல்கிறது. இது நாளைக்கு நம்மில் யாரேனும் இவ்வாறே விரட்டிவிரட்டி பழிபாவங்கள் சுமத்தப்பட்டு கொல்லப்படுவோம் என்கிற எச்சரிக்கையினையும் தருகிறது. படத்தின் இரண்டு பெண் கதாபாத்திரங்கள், பணத்தின் செல்வாக்கு, அதிகாரம், காதல், நேர்மை என்பவை குறித்து பொதுப்புத்தியில் ஆக்கிரமித்திருக்கும் மதிப்பீடுகளை அநாயசமாக குலைத்துப் போடுகின்றனர்.

வெளிப்பகட்டுக்கு ஏதேதோ நியாயம் பேசும் அரசியல்வாதிகளுக்குள் நொதித்தழுகிக் கொண்டிருக்கும் சாதியாணவம், அவர்களுக்கு விசுவாசம் காட்ட எந்த படுபாதகத்தையும் செய்யத் தயங்காத அரசதிகாரிகள், சீருடையணிந்த அடியாள்படையாக காவல்துறையினர், இவர்களது வெறியாட்டத்திற்கு பலியாகும் அப்பாவிகள், என்கவுண்டர் சாவு என்று ஊடகங்களால் கட்டவிழ்த்து விடப்படும் பொய்கள், குழந்தைகளை கடத்தி விற்கும் கும்பல், பிக்பாக்கெட், திருடு என்று நாலாப்பக்கமிருந்தும் முற்றுகையிட்டு திணறடிக்கும் அட்டூழியங்களை எதுவுமே நடக்காதது போல இயல்பாக கடந்துவிட முடியாது என்பதை மிக வலுவாக உணர்த்துகிறது படம்.

பரபரப்பையும் விறுவிறுப்பையும் நோக்கி திருப்பிவிடப்பட்டுள்ள தற்கால மனங்களை தன்பக்கம் திருப்பிக்கொள்ள வேண்டுமானால், அதற்கேற்ற வேகத்தில் கதையோட்டம் இருக்கவேண்டும் என்று இயக்குநர் யோசித்திருக்கக்கூடும். முதற்காட்சியிலிருந்தே அப்படியொரு வேகத்தை நாம் உணரும்படியான ஒளியமைப்பு, இசை, காட்சியடுக்கல் மூலமாக உருவாக்கியிருக்கிறார். சினிமா என்கிற ஊடகத்தின் வரம்பினை உள்வாங்கி அதன் அதிகபட்ச சாத்தியங்களை நிகழ்த்திப் பார்த்திருக்கும் மீரா கதிரவன், சமூகப்பிரச்னைகளை பேசுவதிலிருந்து வெகுவாக விலகிப்போவதில் ஆர்வம் கொண்டுள்ள சினிமாவின் செவுளில் பொளேரென அறைந்திருக்கிறார் என்றே தோன்றுகிறது. – ஆதவன் தீட்சண்யா

Leave a Response