பிற்போக்குத்தனமான சைவம் படப்பாடலுக்காக கிடைத்த விருதைக் கொண்டாடலாமா?


வழிபாட்டு மனோபாவம் என்பது கடவுள் நம்பிக்கையாளர்களிடம் மட்டும் இல்லை. கடவுள் மறுப்பாளர்களிடமும் வழிபாட்டு மனோபாவம் அதே அளவுக்கு இருக்கிறது என்பதற்கு சமீபத்திய உதாரணங்கள் இரண்டு.
மறைந்த சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூ குறித்து மிகப்பெரிய கடவுள் மறுப்பாளர்களின் அஞ்சலிகளில் வெளிப்பட்டது வெற்றி பெற்ற ஒரு அரசியல் தலைவருக்கான அஞ்சலி மட்டுமல்ல. மாறாக லீ குவானை வாழும் தெய்வமாக வழிபடும் வழிபாட்டு மனோபாவத்தின் வெளிப்பாடு.
சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சிக்காக ஒருவர் லீ குவானை தெய்வமாக கொண்டாடமுடியும் என்றால் இந்தியா என்கிற சிக்கலான புதிய தேசத்தின் வடிவமைப்புக்காக காந்தி, நேரு, அம்பேத்காரையும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பெரியார், காமராஜர், அண்ணா, கருணாநிதியையும் நீங்கள் அதைவிட அதிகம் கொண்டாட வேண்டி வரும்.
இந்திய, தமிழக தலைவர்கள் ஊழல்/குடும்ப அரசியல்/சாதியக்கண்ணோட்டத்துடன் இருந்தார்கள் என்பீர்களானால் லீயும் முழுமையான மோசமான சர்வாதிகாரியாகவும்/அமெரிக்காவின் நேரடி முகவராகவும் இருந்ததாக மிக மோசமான குற்றச்சாட்டுக்கள் உண்டு.
அடுத்து சைவம் திரைப்படத்தில் நா முத்துக்குமாரின் பாடலுக்கு கிடைத்த தேசிய விருதுக்காக பெரியாரியவாதிகளும் தமிழ் உணர்வாளர்களும் அடையும் பூரிப்பு விசித்திரமானது.
காரணம் சமீபத்தில் தமிழ் சினிமாவில் வந்த மிக மிக மோசமான, எல்லாவகையிலும் பிற்போக்குத்தனமான திரைப்படம் சைவம். ஜாதிவெறி, மதவெறி, தலித்விரோதமான, அகமண முறையை ஆராதித்து நியாயப்படுத்தும், கொத்தடிமை முறையை ஆதரிக்கும் மோசமான மேல்ஜாதிய மனோபாவத்திடன் எடுக்கப்பட்ட திரைப்படம் சைவம். மாமிசம் சாப்பிடுபவர்களை அரக்கர்களாகவும் மரக்கறியாளர்களை தேவர்களாகவும் கட்டமைக்கும் ஒரு திரைப்படம்.
இப்படிப்பட்ட மோசமான சமூக விரோத கருத்துக்களை விதைக்கும் ஒரு திரைப்படத்தில் முத்துக்குமார் போன்றவர்கள் நல்ல தமிழ்க்கவிஞர்கள் பயன்பட்டிருப்பது மிகவும் மோசமான முன்னுதாரணம். ஆபத்தான போக்கு. அந்த ஆபத்தை உணராமல் விஷத்தை தன் தமிழால் இனிப்பாக்கி எளிமைப்படுத்த உதவிய ஒரு தமிழ்க்கவிக்கு தேசிய விருது கிடைத்திருப்பதை பெரியாரியவாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் கொண்டாடுவது தான் மிகப்பெரிய நகைச்சுவை.
சைவம் படத்தில் முத்துக்குமார் பாட்டு எழுதியதற்க்கும், கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்துமதம் எழுதியமைக்கும் கொள்கை அடிப்படையில் பெரிய வேறுபாடு இல்லை. அழகு தமிழின் பேரால் சைவம் படத்தில் முத்துக்குமார் பாட்டெழுதியதை பெரியாரியவாதிகள் ஆதரிக்கலாம் என்றால் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதத்தையும் பெரியாரியவாதிகள் அதே தமிழின் பேரால் இனி போற்றிப்பாடலாம்.
தமிழ் வாழ்க.தமிழன் வாழ்க என்கிற சர்வரோக நிவாரணி பெரியாரியவாதிகளின் கையில் இருக்கும்போது கவலை எதற்கு?- எல்.ஆர். ஜெகதீசன்

Leave a Response