கமல் பேட்டியில் வெளிப்பட்டது அக்ரஹாரத்து பிஹேவியர் – வலுக்கும் எதிர்ப்புகள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேரி மனப்பான்மை என்று நடிகை காயத்ரி சொன்னதால் அந்நிகழ்ச்சிக்கு உலகெங்கும் கடும் எதிர்ப்பு வந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து கமல் ஜூலை 12 அன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அது என்னுடைய திரைக்கதை அல்ல, என்னுடையதாக இருந்தால் மன்னிப்புக் கேட்கத் தயங்கமாட்டேன் என்று சொன்னார். அதற்கு எதிர்வினையாக வன்னிஅரசு எழுதியுள்ள பதிவில்,,,,

தான் ஒரு பகுத்தறிவாதி, பெரியாரியவாதி என்பதெல்லாம் சும்மா ஏமாற்றுவது தான் என்றும் தான் ஒரு தொழில் முறை திரைப்பட நடிகர் தான் என்பதை கமல் நேற்றைய பேட்டியில் தெளிவு படுத்திவிட்டார்.
‘சேரி பிஹேவியர்’ குறித்த கவலை இல்லாமலேயே
அக்ரகாரத்து பிஹேவியராக வெளிப்பட்டது தெரிந்தது. திரைக்கதை கமலுடையதாக இருந்தால் மன்னிப்பு கேட்கத் தயங்கமாட்டேன் என்று சொல்லுவது என்ன பிஹேவியர்? நடிகை காயத்திரி சொன்னது தவறு என்று சொல்ல இவருக்கு எது தடுக்கிறது?

யாருடைய திரைக்கதையாக இருக்கட்டும் அதைத் தவறு என்று சொல்ல வேண்டாமா?
கண்டிக்க வேண்டாமா? சாதி இன்னமும் இருக்கிறதே என்று சொல்லுவது எந்தப் பெரியாரியவாதிக்கும் ஏற்புடையதல்ல. ஆரியவாதிகளுக்கு வேண்டுமானால் ஏற்புடையதாக இருக்கும்.
பொதுப் புத்தியில், சேரி என்பது இழிவாகக் கட்டமைக்கப்பட்டுள்ளதால் அதை அப்படியே கமல் ஏற்றுகொள்கிறாரா?
முதலில் சேரிப் பண்பாடு குறித்த பார்வை கமலுக்கு என்னவாக இருக்கிறது?
அதி புத்திசாலியாகப் பதில் சொல்லுவதாக நினைத்துக்கொண்டு சாதியக் கட்டமைப்பை ஆதரிப்பது சரிதானா?

முதலில் சேரிப் பண்பாடு குறித்து, விஜய் டிவி குழுவினர், நடிகர் கமல், பிக் பாஸ் இயக்குநர், நடிகை காயத்திரி உள்ளிட்டோர்
தெரிந்து கொள்ளுவது நல்லது.

100 நாள் அந்த நிகழ்ச்சிக்காக தங்குவதற்குப் பதில், 5 நாள் இவர்கள் எல்லோரும் சேரியில் வந்து தங்கட்டும். அப்போது தான் சேரி மக்களின் மனித நேயத்தைத் தெரிந்து கொள்ள முடியும். பகிர்ந்து உண்ணும் பண்பாட்டைத் தெரிந்து கொள்ள முடியும். அவர்களின் மனித நேயத்தோடு கலக்க முடியும். சம்பந்தமில்லாத நபர்களின் பிரச்னைகளை கூட , தன்னை நம்புகிறார்கள் என்பதற்காக உயிரையே கொடுக்கும் பண்பாடு சேரியில் தான் மிச்சமிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளட்டும்.

அது மட்டுமல்ல, சேரிகள் எப்படி நக்சல்பாரிகளுக்கு அடைக்கலம் கொடுத்தது?, காவல்துறை போன்ற அரச பயங்கரவாதத்தை எப்படி போர்க்குணத்தோடு எதிர்கொள்கிறது என்பதையும் தெரிந்து கொள்ளட்டும்.

“பாணன் பறையன் துடியன் கடம்பன்
இந்நான்கல்லாது வேறு சிறந்த குடியும் இல்லை..”
என்று புறநானுற்றில் புலவர் கோவூர் கிழார்
சொன்ன குடிகளில் ஒன்றான பறையர் குடி இன்னமும் சேரியில் இருப்பதன் காரணத்தையும் கமல் போன்ற ‘சமூக அக்கறை’ உள்ளவர்கள் தெரிந்து கொள்ளட்டும்.
தயாரா கமல் அவர்களே?
இவ்வாறு வன்னி அரசு எழுதியுள்ளார்.

Leave a Response