சுற்றுச்சூழல் அமைச்சர் தோப்புவெங்டாசலமே சுற்றுச்சூழலைக் கெடுக்கிறாரா?

 

பெருந்துறை சிப்காட் பகுதியில் 72 ஏக்கர் நிலத்தில் ஆலை அமைத்து, காவேரி ஆற்றில் தினமும் 35 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுத்து குளிர்பானமும், குடிநீரும் தயாரிக்க அமெரிக்காவின் கொக்கோ- ஆலைக்கு தமிழக அரசு அனுமதி அளித்து உள்ளது. இதை எதிர்த்து கடந்த சில மாதமாக மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

அமெரிக்காவின் கொக்கோ- கோலா ஆலையின் கட்டிடப் பணிகளை தடுத்து மக்கள் போரடியதால், தமிழக அரசு ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.சதிசு அவர்கள் தலைமையில் கடந்த மாதம் (டிச-11, 2014) பெருந்துறையில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தியது. இக்கூட்டத்தில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான மக்களும் கொக்கோ- ஆலை அமைவதற்கு தங்களின் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

பெருந்துறை சிப்காட் பகுதியில் செயல்படும் பல்வேறு ஆலைகளினால் ஏற்பட்டு வரும் பாதிப்பை கண்டித்தும், அமெரிக்காவின் கொக்கோ- ஆலைக்கு தமிழக அரசு அனுமதி அளித்து உள்ளதை எதிர்த்தும் கடந்த 05-01-2015 திங்கள் அன்று பாதிக்கப்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் உருவாக்கி உள்ள பெருந்துறை சுற்றுசூழல் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் விழிப்புணர்வு பேரணியை நடத்த பிரச்சாரம் செய்து வந்தனர்.

அமெரிக்காவின் கொக்கோ- ஆலை உட்பட மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் அனைத்து ஆலைகளையும் எதிர்த்து, பெருந்துறையில் நடக்க இருந்த சுற்றுசூழல் விழிப்புணர்வு பேரணிக்கு, பெருந்துறையில் சட்ட ஒழுங்கு பிரச்சினை [30(2) சட்டம் அமுலில் உள்ளது] இருக்கிறது எனக் கூறி, பெருந்துறை சுற்றுசூழல் பாதுகாப்பு அறக்கட்டளை பொறுப்பாளர் தோழர்.ம.கந்தசாமி அவர்களிடம் பேரணிக்கு காவல்துறை தடை விதித்ததாக கூறி 03-01-2015 அன்று கடிதம் கொடுத்தது .

பெருந்துறை- சென்னிமலை பகுதியில் உள்ள அனைத்து தரப்பு மக்களும், அனைத்து இயக்கங்களும் அமெரிக்காவின் கொக்கோ- ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், காவல்துறையை வைத்துக் கொண்டு அரசு ஒரு [30(2) சட்டம் அமுலில் உள்ளது] சட்ட விதியைக் காட்டி, பேரணி நடத்தக் கூடாது என அனுமதி மறுத்தது மாபெரும் ஜனநாயகப் படுகொலை ஆகும்; அமெரிக்காவின் கொக்கோ- ஆலைக்கு துணை நிற்பது ஆகும். பேரணி நடத்த 25-12-2014 அன்று (பத்து நாட்களுக்கு முன்பே) அனுமதி கேட்டு பொறுப்பாளர்கள் கடிதம் கொடுத்த நிலையில், பேரணிக்கு முந்தைய நாள் அனுமதி மறுத்து கடிதம் கொடுப்பது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நீதிமன்றம் சென்று கூட அனுமதி வாங்கி விடக் கூடாது என்னும் அரசின் சதியாகவே பார்க்க வேண்டி உள்ளது.

காவல்துறையின் பேரணி தடைக்கு பின், காவல்துறையை மறைமுகமாக இயக்குவது, அதிகாரத்தில் உள்ள பெருந்துறை தொகுதி அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினரும், தமிழக சுற்றுசூழல் அமைச்சருமாக இப்பொது இருந்து வரும் தோப்பு.வெங்கடாசலம் அவர்கள் இருந்து வருவது என்பது அனவரும் அறிந்ததே. தமிழக சுற்றுசூழல் அமைச்சராக இருந்து வரும் கூட, தனது தொகுதியில் மாசுபடுத்தும் ஆலைக்கு எதிராக எவ்வித மக்கள் போராட்டமும் நடந்து விடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக அவர் இருந்து வருகிறார்.

அமெரிக்காவின் கொக்கோ-கோலா ஆலை ஏற்படுத்தும் பாதிப்பு அனைத்தையும் ஏற்கனவே பல ஆலைகள் மூலம் மக்கள் உணர்ந்து இருந்தாலும், அந்த ஆலையை எதிர்த்து அரசியல் சட்டம் கொடுத்துள்ளதாக சொல்லப்படும் வடிவில் கூட போராட மக்கள் மிகவும் அஞ்ச வேண்டிய நிலையில் இப்பகுதி மக்கள் உள்ளனர். காரணம் காவல்துறையின் தடையை மீறி அமெரிக்காவின் கொக்கோ-கோலா ஆலையை எதிர்த்து போராடினால், தங்களை கைது செய்து, பினையில் வர முடியாத வகையில், சிறையில் அமைச்சரால் வைக்கப்பட்டு விடுவோம் என்பதே இப்பகுதி மக்களின் மன உணர்வாக, அச்சமாக இருந்து வருகிறது.

இதற்கான காரணம் என்பது கடந்த ஜூலை’2011-ஆம் ஆண்டில் இப்பகுதி விவசாயிகள் நடத்தி கைதாகி, மாதக்கணக்கில் சிறையில் இருந்த ஒரு போராட்டம். ஒரு விவசாயி தனது தோட்டத்தில் தொடர்ந்து பயிர்களை பாழ்படுத்தி விட்டதாக கருதி மயில்களுக்கு விசம் வைத்து கொன்று விட்டர். மயில் தேசியப் பறவை அதைக் கொள்வது சட்ட விரோதம் என்பதால் அவர் காவல்துரையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். விவசாய நிலங்களை தொடர்ந்து பாழ்படுத்தி வரும் மயில்களை கட்டுப்படுத்தக் கோரியும்,மயில்களுக்கு விசம் வைத்து கொன்றதாக கைது செய்யப்பட்ட விவசாயியை விடுதலை செய்யக் கோரியும் காவல்துறையிடம் அனுமதி கடிதம் கொடுத்து விட்டு பெருந்துரையில் உண்ணாவிரதப் போராட்டம் இருந்தனர். உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கி சில மணி நேரம் கழித்து, உண்ணாவிரதப் போராட்டத்தில் இருந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட சுமார் 250 பேர்களை, நிபந்தனை பிணையில் வர முடியாத கடுமையான பிரிவுகளில் கைது செய்து சிறையில் அடைத்தனர். சுமார் ஒரு மாத காலம் வரை சிறையில் இருந்த பிறகு உயர்நீதிமன்ற பிணையின் மூலமே பெண்கள் உட்பட அனைவரும் சிறையில் இருந்து வெளி வர முடிந்தது. இதற்கு அனைத்திற்க்கும் பின்புலமாக இருந்தது என்பது பெருந்துறை தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த தோப்பு.வெங்கடாசலம் அவர்கள்தான் அனைவருக்கும் தெரிந்த உண்மை. ஏனெனில் இப்போராட்டத்தை ஒருங்கினைத்தது தேர்தலில் அவரை எதிர்த்து போட்டியிட்ட கட்சி என்பதுதான் காரணம்.

பல கோடி ருபாய் கொள்ளயடிப்பவர்கள் கூட கண்துடைப்பாக கைது செய்யப்பட்டு சில வாரங்களில் வெளியே வரும் இந்த நாட்டில், உண்ணாவிரதப் போராட்டம் இருந்ததற்க்காக 100 மேற்பட்ட பெண்கள் உட்பட பலர் மாதக்கணக்கில் கொடுமையான பிரிவுகளில் சிறையில் அடைக்கப்பட்ட கொடுமை அதிமுக அரசின் ஆட்சியில் நடத்தப்பட்டது.

தமிழக சுற்றுசூழல் அமைச்சராக வலம் வந்து கொண்டு தனது தொகுதியில் உள்ள அனைத்து மாசுபடுத்தும் ஆலைக்கும் பாதுகாப்பாக இருந்து கொண்டு , மாசுபடுத்தும் ஆலைக்கு எதிராக எவ்வித மக்கள் போராட்டமும் நடந்து விடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்து வருகிறார் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம். மக்கள் பல மாதமாக அமெரிக்காவின் கொக்கோ-கோலா ஆலையை எதிர்த்து தொடர்ந்து போரடிக் கொண்டு இருக்கும் போது, சில வாரங்களுக்கு முன்புதான் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் வாய்திறந்து கொக்கோ-கோலா ஆலை சுற்றுசூழல் அனுமதிக்கு இதுவரை வரவில்லை என சொல்லியுள்ளார். அமைச்சர் கொக்கோ-கோலா ஆலைக்கு சுற்றுசூழல் அனுமதி தரவில்லையெனில், ஆலை நிர்வாகம் நீதிமன்றம் போய் அனுமதி வாங்கி விடுவார்கள். இதுதான் பன்னாட்டு கம்பனியான அமெரிக்காவின் கொக்கோ-கோலா ஆலையின் வழக்கமான நடைமுறை.

உண்மையில் அமைச்சரும், தமிழக அரசும், அதிகாரிகளும் இந்த அமெரிக்காவின் கொக்கோ-கோலா ஆலை பெருந்துறையில் தொடங்கப்பட, மிகப் பெரிய அளவில் மறைமுகமாக பல்வேறு பயன்களை அடைந்து உள்ளார்கள் என்பதுதான் அப்பட்டமான உண்மை.

அமைச்சர், தமிழக அரசு, அதிகாரிகள் அனைவரின் ஒத்துழைப்போடுதான் அமெரிக்காவின் கொக்கோ-கோலா ஆலை பெருந்துறை சிப்காட் பகுதியில் நிலம் வாங்கி கட்டிடப் பணியை தொடங்கினார்கள். மக்கள் தனக்கு வரப் போகும் பாதிப்பை முன் உணர்ந்து கொண்டு விழிப்புணவோடு அமெரிக்காவின் கொக்கோ-கோலா ஆலையின் கட்டிடப் பணியை தொடர்ந்து தடுத்துப் போராட, இந்த மாவட்டத்தில் இதுவரை இல்லாத ஒரு முறையாக அதிகாரிகள் முதன்முதலில் மக்களை அழைத்து கருத்துக் கேட்புக் கூட்டம் எனும் ஒரு நாடகத்தை அரங்கேற்றினர். பின்பு மாவட்ட ஆட்சியர் பிரபாகரன் அவர்கள் இது கருத்துக் கேட்புக் கூட்டம் அல்ல, போராடும் மக்களை அழைத்து பேசிய கூட்டம் மட்டும்தான் என நான்(முகிலன்) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் இது பற்றி கேட்ட போது குறிப்பிட்டார்.

இப்படிப்பட்ட நிலையில்தான் வேறு வழியின்றி மக்கள் தனது எதிர்ப்பை அரசுக்கு காட்ட, இன்று (08-02-2015)ஞாயிற்றுக்கிழமை, ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் அமெரிக்காவின் கொக்கோ-கோலா ஆலையை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டத்திற்க்கு உயர்நீதிமன்றத்தில் (WP.NO.1865/2015) அனுமதி வாங்கியுள்ளனர். இன்று காலை முதல் அமெரிக்காவின் கொக்கோ-கோலா ஆலையையும், சிப்காட்டில் மாசுபடுத்தி வரும் பல ஆலைகளையும் எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்திக் கொண்டு உள்ளார்கள்.

போராட்ட அமைப்புகள் மக்களை உயர்நீதிமன்றத்தில் (WP.NO.1865/2015) அனுமதி வாங்கியுள்ளோம், காவல்துறை பாதுகாப்போடு நடக்கும் போராட்டம் என்று சொல்லி அழைப்பது எவ்வளவு தூரம் அரசின் அடக்குமுறையை கண்டு பலரும் மிரண்டு உள்ளனர் என்பதைக் காட்டுகிறது. ஜனநாயகத்தின் நிலை என்பது கேலிக்கு உரியதாக மாற்றப்பட்டு வருகிறது.

செப்டம்பர் மாதம் 27-2014 ஆம் தேதி தொடங்கி, கிட்டத்தட்ட தமிழகம் முழுக்க இருவார காலம் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் கைது செய்யப்பட்டதை காரணம் காட்டி, அ.இ.அ.தி.மு.க.வினரும், ஆட்சி அதிகாரத்தில் உள்ள எண்ணற்ற அ.இ.அ.தி.மு.க. உள்ளாட்சி, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் செய்த சட்ட ஒழுங்கு பிரச்சினைகளை நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் அறிவோம். அப்போது எல்லாம் கெட்டுப் போகாத சட்டம்- ஒழுங்கு, மக்கள் தங்கள் வாழ்வாதாரம் அழிவதை எதிர்த்து அமைதியாக ஒரு போராட்டம் நடத்தினால் கெட்டு விடும் என காவல்துறையை வைத்து அரசு தடை விதிப்பது, மக்களை மிரட்டுவது என்பது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

ஒவ்வொரு பிரச்சினைக்கும் உயர்நீதிமன்றம் சென்று அனுமதி பெற்று மக்களால் போராட்டம் நடத்த முடியாது. ஜனநாயக நாட்டில் தனது பிரச்சினகளை முன்வைத்து போராட அனைவருக்கும் உரிமை உண்டு. மக்களின் போராட்டத்தை தனது சுரண்டல் நலனுக்காக அனுமதிக்க மறுத்து, அமெரிக்காவின் கொக்கோ-கோலா ஆலை போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக தமிழக அரசும், அதிகாரிகளும் செயல்படுவதை எந்த மனசாட்சியுள்ள மனிதனும் அனுமதிக்க முடியாது.

அனைவரும் பெருந்துறை அமெரிக்காவின் கொக்கோ-கோலா ஆலையை எதிர்த்து நடக்கும் போராட்டதிற்க்கு துணை நிற்போம். ஜனநாயக உரிமையை பாதுகாப்போம். -முகிலன்

Leave a Response