தொண்டன் – திரைப்பட விமர்சனம்

சமுத்திரக்கனி எழுதி இயக்கி நாயகனாகவும் நடித்திருக்கிறார். அவருடைய அப்பாவாக வேலராமமூர்த்தி, தங்கையாக அர்த்தனா எனும் புதுமுகம், காதலி மற்றும் மனைவியாக சுனைனா, நண்பர்களாக விக்ராந்த், கஞ்சாகருப்பு, மூர்த்தி உள்ளிட்டோர். இவர்கள் ஒருபக்கம்.

இன்னொரு பக்கம் தமிழக அமைச்சராக ஞானசம்பந்தம், அவருடைய மகன்களாக நமோநாராயணா, சவுந்தரராஜா, காவலதிகாரி திலீபன் மற்றும் அரசு ஊழியர்கள்.

சாமான்யனான சமுத்திரக்கனி மருத்துவ ஊர்தி (ஆம்புலன்ஸ்) ஓட்டுபவர். ஒரு உயிரைக்கூட இழக்கக்கூடாது பாதுகாத்துவிட வேண்டும் என்று துடிப்பவர்.

அவருக்கும் அரசியலுக்காக உயிர்களை சர்வசாதாரணமாக எடுக்கும் அமைச்சர் மகனுக்கும் நடக்கும் மோதல்தான் படத்தின் அடிப்படை.

இதை வைத்துக்கொண்டு ஒவ்வொரு காட்சியிலும் சமூகத்துக்குத் தேவையான கருத்துகளை சொல்கிறார் சமுத்திரக்கனி. திருவள்ளுவர், காந்தி, அப்துகலாம் உள்ளிட்ட தலைவர்களை சாட்சியாக வைத்துக்கொண்டு மீத்தேன், காவிரி நீர், ஏறுதழுவுதல், மாணவர் போராட்டம் உள்ளிட்ட சமகாலச்சிக்கல்கள் அனைத்தையும் பேசுகிறார்.

அவர் இல்லாத நேரங்களில் விக்ராந்த், சூரி, அர்த்தனா ஆகியோர் பேசுகிறார்கள்.

காதல், சண்டை, அழுகை, பாசம், கோபம் என எல்லாவற்றிற்கும் காட்சிகள் வைத்துக்கொண்டிருக்கிறார் சமுத்திரக்கனி. சாதிதான் எல்லாம் என்று சொல்கிற அரசியல்வாதியிடம், தமிழ்நாட்டில் இருந்த காளைகளின் வகைகளை வரிசையாக ஒரே காட்சியில் சமுத்திரக்கனி சொல்லும் இடம் கைதட்டல் பெறுகிறது.

ஒரு படத்தில் நல்லகருத்து இருக்கலாம் மொத்தமும் கருத்தாக இருந்தால் அது நல்லபடமாக இருக்குமா? என்கிற கேள்விக்கு இந்தப்படம் பதில் சொல்லும்.

Leave a Response