
இராமேசுவரம் தங்கச்சி மடம் மீனவர் பிரிஜ்ஜோ, மார்ச் 6-ந் தேதி கச்சத்தீவு அருகே மீன் பிடித்தபோது, சிங்களக் கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டார். சிங்களர்களின் இந்தத் தாக்குதல், தமிழகத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பலியான பிரிஜ்ஜோவின் உடல், ராமேசுவரம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப் பட்டது. அப்போது அவரது கழுத்தில் பாய்ந்தது ஏ.கே.47 ரக குண்டு என தெரியவந்தது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் பல போராட்டங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.
இந்நிலையில், இலங்கை நாடாளுமன்றத்திலும் இச்சிக்கல் பற்றிப் பேசப்பட்டுள்ளது.
சர்வதேசக் கடல் எல்லையை தாண்டும் மீனவர்களைச் சுட்டுக் கொல்வது அதற்கு பரிகாரம் அல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சா.வியாழேந்திரன் பேசியிருக்கிறார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதமொன்றில் உரையாற்றிய அவர் இதனைப் பேசியிருக்கிறார்.
தமிழ்நாடு மீனவர் மீது இலங்கை கடற்படையினரால் நடத்தப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிச்சூடு சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு இராமேஸ்வரம் மீனவரொருவர் சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி வந்தபோது கடற்படையால் சுடப்பட்டுள்ளார் என்றும், சர்வதேச கடல் எல்லையை யார் தாண்டி வந்தாலும் அவர்களைக் கைது செய்ய வேண்டுமே தவிர சுட்டுக் கொல்ல வேண்டும் என்பது பரிகாரம் அல்ல என்றும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சா. வியாழேந்திரன் கூறியுள்ளார்.
அவருடைய பேச்சுக்கு தமிழ்மக்கள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.


