‘இந்தியாவில் கருப்புப் பணத்தை ஒழிக்கமுடியாது’ – எதார்த்தம் பேசுகிறார் பொருளாதாரப் பேராசிரியர் அருண்குமார்!

பொருளாதாரப் பேராசிரியர் அருண்குமார், கருப்புப் பணம் குறித்து அதிக அளவில் மேற்கோள் காட்டப்படும் பொருளாதார நிபுணர்களில் ஒருவர். த ப்ளாக் எகானமி இன் இந்தியா(1999) இந்தியா எகானமி சின்ஸ் இன்டிபெண்டன்ஸ் பர்சிஸ்டிங் கலோனியல் டிஸ்ரப்சன்(2013) ஆகிய இரு நூல்களின் ஆசிரியர். இந்தியாவில் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள டினானிட்டைசேஷன் பற்றி அவர் ஸ்க்ரோல் இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் இருந்து சில கருத்துகள்…

பொருளாதார அறுவைச் சிகிச்சைக்காக மற்ற இடங்களில் டிமானிட்டைசேஷன் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் அதே நிலையில் அது இந்தியாவில் பயன்படுத்தப்படவில்லை. சோவியத் யூனியன் அல்லது வெய்மர் குடியரசு போல, எங்கே பணம் அதன் முழுமையான மதிப்பை இழந்திருக்கிறதோ அந்த நாடுகளில் புதிய கரன்சிகள் அறிமுகம் செய்யப்பட்டன. அங்கெல்லாம் பை நிறைய கரன்சிகளை திணித்துக்கொண்டுபோனால்தான் தினசரி செலவுகளை சமாளிக்கமுடியும். அந்த கரன்சிகள் அழிக்கப்பட்டு, புதிய கரன்சிகள் உருவாக்கப்பட்டன. ஆனால் இந்தியாவில் அந்த நிலைமை இந்தியாவில் இல்லை.
இங்கே பொருளாதாரத்தில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் தேவையில்லை. நம்முடைய மிகப்பெரிய பொருளாதாரச் சூழல் உண்மையில் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் உண்மையில், இந்த முடிவு என்ன சாதித்திருக்கிறது. பிரதமர் இரண்டு நோக்கங்களைச் சொல்லியிருக்கிறார். ஒன்று தீவிரவாதிகளிடம் புழங்கும் கள்ள நோட்டுகளை ஒழிப்பது. அடுத்து வறுமைக்குக் காரணமாகவும், இந்தியாவில் பல பிரச்சினைகளுக்கு காரணமாகவும் இருக்கும் மிகப்பெரிய அளவில் தேங்கியிருக்கும் கருப்புப் பணத்தை அழிப்பது.

கேள்வி இதுதான் – இந்த இரண்டு பிரச்சினைகளையும் டிமானிட்டைசேஷன் முறியடித்துவிடுமா. கள்ளப் பணத்தைப் பொருத்தவரையில், 400 மில்லியன் ரூபாய்கள் இருக்கின்றன. இது மிகச்சிறிய அளவுதான். ஆர்பிஐ கணக்குப்படி 400 கோடி ரூபாய் கள்ளப்பணம் இருக்கிறது. நாட்டில் ரூபாய் நோட்டுகளின் புழக்கம் 15.5 லட்சம் கோடி ரூபாய்.

தீவிரவாதிகளுக்கு நிதி தேவைப்படுகிறது. எனவே, அவர்கள் கள்ள நோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில் விடுகிறார்கள். ஆனால் ஒருமுறை அவர்கள் அந்தப் பணத்தை மற்றொருவரிடம் கொடுத்துவிடும்போது, அது பொருளாதாரத்திற்குள்தான் இருந்திருக்கிறது. அதை யார் தடுப்பது? எப்படி தடுப்பது? அதனை டிமானிட்டேசேஷனால் மட்டும் தடுக்கமுடியாது. ஏனெனில் கள்ள நோட்டு உருவாக்கத்தில் உள்ளூர்க்காரர்களும் இருக்கிறார்கள். அவர்கள் புதிய நோட்டுகளைக் கூட உருவாக்குவார்கள்.

முதலில் நீங்கள் சம்பாதிக்கவேண்டும். அதில்தான் நீங்கள் சேமிக்கவேண்டும். செல்வத்தை உருவாக்கவேண்டும். உங்கள் வருமானம் எவ்வளவாகவும் இருக்கலாம். அதில் ஒரு பகுதியை செலவழிக்கிறீர்கள். ஒரு பகுதியை சேமிக்கிறீர்கள். சேமிப்பதை பலவிதங்களில் முதலீடு செய்கிறீர்கள். அதுதான் உங்களுக்கு சொத்தைக் கொடுக்கிறது. சொத்து என்பது ரியல் எஸ்டேட், தங்கம், பங்குச்சந்தை அல்லது ரொக்கப்பணம்.

உங்கள் சொத்தில் ஒரு கூறு பணம் – அது உங்கள் சொத்தில் ஒரு சதவீதம்தான். கருப்புப் பொருளாதாரம், என்னுடைய மதிப்பீட்டின்படி அது ஜிடிபியில் 62 சதவீதம், தற்போதைய ஜிடிபியில் 150 லட்சம் கோடி ரூபாய். நாம் இந்த ஆண்டு 93 லட்சம் கோடி ரூபாய் கருப்பு வருமானத்தை உருவாக்கியிருக்கிறோம். கருப்புச் சொத்து என்பது மூன்று மடங்கு அதிகமானது. அது 300 லட்சம் கோடி ரூபாயாக இருக்கலாம். அதில் 3 லட்சம் கோடி ரூபாயை கருப்புப் பணம் என்று சொல்லலாம்.

கருப்பு வருமானம், கருப்புப் பணம், கருப்புச் சொத்து ஆகிய மூன்றும் வெவ்வேறானவை. அதில் மக்கள் தவறாக புரிந்துகொள்கிறார்கள். அவை மூன்றும் ஒன்று என நினைக்கிறார்கள். உங்கள் கருப்புச் சொத்தில் கருப்புப் பணம் என்பது 1 சதவீதம் தான். நீங்கள் முழுமையாக 3 லட்சம் கோடி ரூபாய் கருப்புப் பணத்தை அழிப்பீர்கள் என்றால். 1 சதவீதம் கருப்புச் சொத்தையும் 3 சதவீதம் கருப்பு வருமானத்தையும் நீக்குகிறீர்கள்.

3 லட்சம் கோடி ரூபாயை நீங்கள் அழிகக்ப்போகிறீர்களா? மக்களுக்கு அதை மறுசுழற்சி செய்யத் தெரியும். அறிவிப்பு வந்த அந்த தினத்தன்று, ஜூவல்லரிகள் அதிகாலை 3 மணி வரை திறந்திருந்தன. தங்கம் வாங்கியவர்களுக்கு பின்தேதியிட்ட ரசீதுகள் வழங்கப்பட்டன. தன் ஊழியர்களுக்கு நான்கு மாதங்களுக்கான ஊதியத்தை முன்பே கொடுத்ததாகக் கூறினார். அதன் மதிப்பு 20 கோடி ரூபாய். அவர்கள் அதை வங்கியில் டெபாசிட் செய்வார்கள். அந்த கருப்புப் பணம் பயன்படுத்தப்படும்.
கிராமப்புறங்களில் ஜன்தன் யோஜனா பெரிய அளவில் பயன்பட்டிருக்கிறது. ஒரு நிழக்கிழார் சொன்னார்: 100 பேரிடம் தலா 20 ஆயிரம் ரூபாய் வீதம் கொடுத்து, பிறகு அவரிடம் திருப்பித்தருவார்கள். ஆகவே நீங்கள் 3 லட்சம் கோடி ரூபாயை மதிப்பிழக்க வைக்காதீர்கள். முதலில் 50 ஆயிரம் கோடி ரூபாய் முதல் 70 ஆயிரம் கோடி ரூபாய் வரை மதிப்பிழக்கச் செய்யுங்கல். அப்போது பிரதமரின் இரண்டு நோக்கங்களும் நிறைவேறும்.

ஒரு ஆண்டில் 3 லட்சம் கோடி ரூபாயை மதிப்பிழக்கச் செய்தால், ஆனால் கருப்பு வருமானம் முன்புபோலவேதான் தொடரும். போலி மருந்துகள் விற்பனை, போதை மருந்துகள் விற்பனை, கேபிட்டேசன் கட்டணம், இன்வாய்ஸ் போன்ற பலவழிகளில் அது தொடரும். மீண்டும் பணம் உருவாக்கப்படும். நீங்கள் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வேறு அறிமுகம் செய்திருக்கிறீர்கள். அது கருப்புக்கு உதவியாக இருக்கும்.

இந்தியாவில் கருப்புப் பொருளாதாரமும் நல்ல பொருளாதாரமும் மிகப்பெரிய அளவில் கலந்திருக்கிறது. எனவே உங்கள் ரியல் எஸ்டேட் சொத்தை விற்கும்போது கருப்பும் வெள்ளையும் ஒரே நேரத்தில் வருமானமாகக் கிடைக்கிறது. நீங்கள் சர்க்கரை உற்பத்தி செய்யும்போது 10 சதவீதத்தை மட்டும் காட்டமாட்டீர்கள். 90 சதவீதத்தைக் காட்டுவீர்கள். கருப்புப் பொருளாதாரம் பாதிக்கப்படும்போது வெள்ளைப் பொருளாதாரமும் பாதிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கை கருப்புப் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்போதே, வெள்ளை பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஒரு ஒப்புமையைச் செய்யலாம். ஒருவரின் உடலில் இருந்து 85 சதவீதம் ரத்தத்தை எடுத்து, அடுத்து 5 சதவீதத்தை கொடுத்தால், அந்த மனிதருக்கு என்ன நடக்கும்? அந்த மனிதர் இறந்துவிடுவார். அதேதான் இங்கேயும் நடந்திருக்கிறது. 85 சதவீதம் புழக்கத்தில் இருந்த பணத்தை எடுத்துவிட்டு, மெதுவாக 5 சதவீதத்தை புழக்கத்திற்கு கொண்டுவருகிறீர்கள். அடுத்து என்ன நடக்கும்? வருமானத்தின் புழக்கம் கீழிறங்கிவிடும்.

வர்த்தக சமூகம் பாலைவனமாக மாறிவிட்டது. வணிகர்கள் ரொம்பவும் நோந்துபோயிருக்கிறார்கள். விவசாயிகளும் ஊழியர்களும் மனம் உடைந்திருக்கிறார்கள். தில்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை நகரங்களில் நீண்ட வரிசைகளில் மக்கள் நின்றுகொண்டிருப்பதை தேசிய ஊடகங்கள் காட்டுகின்றன. ஆனாலும் கிராமங்களில் கொஞ்சம் பணம் இருக்கிறது. நீண்ட தூரம் நடந்து வங்கிக்குச் சென்று விட்டு வெறுங்கையுடன் வீடு திரும்புகிறார்கள்.

தமிழில்: தருண்

Leave a Response