
சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள தக்சின் சித்ரா ஓவியக் கூடத்தில் தேசிய விருது பெற்ற ஓவியர் அனாமிகாவின் I see what I draw ஓவியக் கண்காட்சி நடைபெற்றுவருகிறது. நவம்பர் 5 ஆம் நாள் தொடங்கிய இக்கண்காட்சி டிசம்பர் 7 ஆம் தேதி நடைபெறுகிறது. கேன்வாஸ் ஒரு பளிங்குத் தரைபோல மிளிர்கிறது.
சமூக நடப்புகள் மீதான விமர்சனத்தை, கோபத்தை ஓவியங்களின் வழியாக கலை வெளிப்பாடாக மாற்றியிருக்கிறார். மனித உடலை ஒரு ஊடகமாகக் கையாண்டிருக்கும் அனாமிகா, அதற்குள் குளங்களில் மிதக்கும் பாசிகளின் மெல்லிய வேர்களைப் போன்ற சில்வர், கருப்புக் கோடுகளில் அசாத்தியங்களை நிகழ்த்தியிருக்கிறார்.
நவீன ஓவியவெளியில் அனாமிகா வளர்ந்துகொண்டே இருக்கிறார். அவர் எடுத்துக்கொள்ளும் கருப்பொருள்கள் கற்பனைகளின் எல்லைகளைத் தாண்டி கலையின் செழுமையைப் பேசுகின்றன. எதையும் கேள்வி கேட்கும் குழந்தையின் மனம் சிறு ஓவியங்களில் ததும்புகிறது.

தன் ஓவியங்களின் படைப்பாக்கம் பற்றி ஓவியர் அனாமிகா என்ன சொல்கிறார்?
எனக்கு இயற்கை போட்டியாக இருக்கிறது.எனக்குள் பல மாற்றங்களையும் சிந்தனைகளையும் தந்திருக்கிறது. சதா இயங்கிக்கொண்டிருக்கும் இயற்கையைப் போல, தவத்தைப் போல, தியானத்தைப் போல ஓவியவெளியில் செயல்பட விரும்புகிறேன். எனக்கு எதிரே இருக்கும் கேன்வாஸ் தியான மண்டபமாகத் தெரிகிறது.
உச்சி கோயிலில் இருந்து புத்தமத பிச்சு, தியானத்தின் வழியாக சமூகத்துக்கான என்ன பங்களிப்பு செய்கிறாரோ அதேபோலத்தான் ஓவியத்தின் வழியாக நான் சிறு பங்களிப்பை இந்த சமூகத்திற்கு செய்வதாக நினைக்கிறேன்.
நானும் ஓவியமும் தனிமையாக இருக்கிறோம். படைப்பின் சுழலில் அமிழ்ந்து கரைந்துபோகிறோம். அதுவொரு அற்புத அனுபவம். இந்தக் கண்காட்சியில் வைக்கப்பட்டிருக்கிற ஓர் ஓவியத்தைத் தீட்ட நான்கு ஆண்டுகள் எடுத்துக்கொண்டேன். எதற்கும் நான் அவசரப்படவில்லை.
எனக்கு பயணங்கள் மாறுபட்ட அனுபவங்களைத் தருகின்றன. பூடான் போயிருந்தோம். அங்கு மண்ணால் கட்டப்பட்ட வீடுகள் அதிகம். குளிரைத் தாங்குகின்றன. பழமையான வீடுகள். அந்த மக்களுடன் பேசியதும், பழகியதும் வாழ்க்கையைப் பற்றிய பார்வையை மாற்றின. மைனஸ் 40 டிகிரியில் இருக்கிறார்கள். ஆனால் தினமும் குளி்ததுவிட்டு வழிபாடுகளை நடத்துகிறார்கள். இதெல்லாம்கூட என் ஓவியப் படைப்பில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
என் கோபங்களையும் மகிழ்ச்சியான தருணங்களையும் தனித்துவமான அனுபவங்களையும் வேறு வேறு வடிவங்களில் ஓவியத்தில் வெளிப்படுத்தி இருக்கிறேன்.பெண்களை ஒரு பொருளாகப் பார்க்கிற போக்குதான் சமூகத்தில் அதிகம் இருக்கிறது. அந்த உணர்வையும் வெளிப்படுத்தியிருக்கிறேன். ஓவியக் காட்சிக்கு வருகிறவர்கள் ஏன் இவ்வளவு ட்ரான்ஸ்பரண்டாக பெண்களின் உருவங்களை வைத்திருக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். அதன் வழியாக நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது முக்கியம்.
துணிக்கடைகளில் எப்போதும் பெண்களின் பொம்மைகளைப் பார்த்துக்கொண்டே இருக்கிறோம். அதைத்தான் நான்ஒவியப்படைப்பாக மாற்றி யோசிக்கவைத்திருக்கிறேன். பெண்களை ஒரு பொருளாக பார்க்கிற பார்வையை விட்டு உயிராக பார்க்கவேண்டும் என்பதைத்தான் நான் அந்த வடிவத்தைப்பயன்படுத்தி அதில் கோடுகளை வரைந்து படைப்பாக மாற்றியிருக்கிறேன்.
யார் என்ன நினைப்பார்களோ என்ற தயக்கம் எனக்கு இருந்ததில்லை. என் எண்ணங்களை ஓவியங்களாக வெளிப்படுத்துகிறேன். உங்களுக்குப் பிடிக்கலாம். பிடிக்காமலும் போகலாம். கைவினைக்கும் ஓவியத்திற்குமான இடைவெளியை நான் கலைரீதியாக உருவாக்க விரும்பவில்லை. ஆழமாகவும் அதே நேரத்தில் தெய்வீக அனுபவத்தைத் தருவதாகவும் இருக்கின்றன. பலவித கற்பிதங்களை ஓவியங்களில் உடைத்துவிடுகிறேன். பலவிதமான வகைப்பாடுகள், வித்தியாசமான கடினமான கோடுகள், வண்ணங்கள், பரப்பு, பாணி என எல்லாவற்றிலும் புதுமையைச் செய்யவே விரும்பிகிறேன். அதையே என் படைப்புகளில் செயல்படுத்துகிறேன்.
என்னுடைய ஓவியங்களில் சில்வர் பாயிண்ட் நுட்பத்தைப் பயன்படுத்தி கோடுகளை வரைந்திருக்கிறேன். பதினான்கு மற்றும் பதினேழாம் நூற்றாண்டில் இத்தாலி, நெதர்லாந்து மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. சில்வர் பாயிண்ட் கேன்வாஸில் வெள்ளி நிறக் கோடுகளை வழங்குகிறது. இதுபோன்ற கோடுகளைச் செய்வது கடினம்தான். நாட்கள், மாதங்கள், ஆண்டுகளைக் கடந்து இந்த ஓவியங்களை படைத்திருக்கிறேன். நீங்கள் பார்க்கும்போது அற்புதமான அனுபவத்தை உணர்வீர்கள் என்கிறார் அனாமிகா.
