
புதிய தலைமுறை தொலைக்காட்சி முதுநிலை ஆசிரியர் விஜயன் மீதான காவல்துறை நடவடிக்கைக்கு சென்னை பத்திரிகையாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை பத்திரிகையாளர் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….
புதிய தலைமுறை தொலைக்காட்சி முதுநிலை ஆசிரியர் விஜயன் அவர்களை அரசியல் வழக்கு தொடர்பாக காவல்துறையினர் சம்மன் அனுப்பி விசாரித்தனர்.அவரும் நேற்று இரவு 10 மணிக்கும்,பின்னர் அழைத்தும் உரிய ஒத்துழைப்பு அளித்து ஆஜரானார்.அதன்பிறகும் அவரது செல்போனைப் பறித்து வைத்துக்கொண்டு,இன்றும் தொடர்ச்சியாக அவரிடம் விசாரணை நடத்தி அசாதாரண சூழலை ஏற்படுத்துகின்றனர்.
வழக்கின் தன்மைக்குள் நாம் செல்லவில்லை என்றாலும்,பொதுவெளியில் ஊடகப்பணியில் இருக்கும் ஒருவர், அந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் எவரிடமும் செய்தி தொடர்பாகப் பேசியிருந்தால்,அதுவே குற்றம் என்பதைப்போல காவல்துறை அணுகுவது ஊடகசுதந்திரத்தை நசுக்கும் செயலாகும்.
அரசுக்கும் மக்களுக்கும் இடையில் உண்மைகளை உலகுக்குக் காட்டுவதுதான்,ஊடகத்தவரின் பணி என்பதை தமிழக அரசாங்கத்துக்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
குறிப்பாக,காவல்துறை அமைச்சரான முதலமைச்சர் விஜய் இதில் உடனடியாகத் தலையிட்டு முதுநிலை ஆசிரியர் விஜயன் அவர்களை இயல்பான கடமைகளில் ஈடுபட ஆவண செய்யவேண்டும் என சென்னை பத்திரிகையாளர் சங்கம் ( MUJ) வலியுறுத்துகிறது.
அண்மையாக முதலமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் ஊடகத்தினர் தங்களின் செய்திக் கடமையைச் செய்வதற்கு இடையூறுகள் செய்யப்படுவதையும் முதலமைச்சரின் கவனத்துக்கு மீண்டும் கொண்டுவருகிறோம்.
ஊடக சுதந்திரத்தின் மீதான தாக்குதலை சென்னை பத்திரிகையாளார் சங்கம் (MUJ) வன்மையாகக் கண்டிக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


