
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை முகைதீன் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் ஹாஜா முகைதீன் (38). இவரது மனைவி பர்ஹானா.இவர்களுக்கு 3 வயது மகன் மற்றும் 2 மாதத்தில் ஒரு மகன் ஆகியோர் உள்ளனர்.
ஹாஜா முகைதீன்,அதிமுகவின் தொலைக்காட்சியான நியூஸ் ஜெ தொலைக்காட்சியில் முத்துப்பேட்டை பகுதி செய்தியாளராக வேலை பார்த்து வருகிறார்.
நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் அவர் குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தார்.நள்ளிரவு 11.45 மணியளவில் முத்துப்பேட்டை புதுத்தெருவைச் சேர்ந்த அப்துல் பாசித் (20) மற்றும் அவரது நண்பர்கள் சபீர் அஹமது (21), அப்பாஸ் (21) ஆகியோர் கஞ்சா போதையில் ஹாஜா முகைதீன் வீட்டுக்குச் சென்று கதவைத் தட்டினர்.
சத்தம் கேட்டு மாமியார் முருகாயி (58) எழுந்து வந்து கதவைத் திறந்தார்.அப்போது செய்தியாளர் ஹாஜா மைதீனிடம் பேசவேண்டும் என்று அந்த கும்பல் கூறியது.இதையடுத்து அவர் எழுந்து வந்து வீட்டு வாசலில் நின்று என்ன வேண்டும் என்று கேட்டுள்ளார்.அப்போது அப்துல் பாசித்,தன்னை கோவிலூரை சேர்ந்த ஒருவர் தாக்கிவிட்டார்.காவல்நிலையத்தில் புகார் கொடுத்தோம்.புகாரை போலீசார் ஏற்கவில்லை.நீங்கள் வந்து சொல்லுங்கள் என்று கூறினார்.இதையடுத்து வீட்டுக்கு வெளியே வந்த ஹாஜா முகைதீன்,அந்த கும்பலிடம் விசாரித்துக் கொண்டிருந்தார்.அப்போது மறைத்து வைத்திருந்த பீர்பாட்டிலை எடுத்து ஹாஜா முகைதீன் தலையில் அப்துல் பாசித் தாக்கினார்.இதில் அந்த பாட்டில் உடைந்தது.உடைந்த பாட்டிலால் ஹாஜா முகைதீன் வயிறு, மார்பு பகுதியில் சரமாரியாகக் குத்தினார்.மேலும் அவரது செல்போனை பிடுங்கினர்.ஹாஜா முகைதீன் கூச்சலிட்டதால் அருகில் இருந்த பொதுமக்கள் ஓடிவந்தனர்.அதற்குள் 3 பேரும் தப்பினர்.
படுகாயமடைந்த ஹாஜா முகைதீனை பொதுமக்கள் மீட்டு முத்துப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து முத்துப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிந்து, கஞ்சா போதை தொடர்பாக அப்துல் பாசித் குறித்த செய்தியைச் சேகரித்து டிவிக்கு கொடுத்ததால் ஹாஜா முகைதீனை தாக்கினரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரித்து வருகின்றனர்.
நள்ளிரவில் செய்தியாளரை கஞ்சா கும்பல் தாக்கிய சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் காணொலி சமூகவலைதளங்களில் தற்போது வேகமாகப் பரவிவருகிறது.
இதுகுறித்து திருவாரூர் மாவட்ட காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பு….
இந்த சம்பவம் தொடர்பாக முத்துப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டதில்,ஹாஜா முகைதீனை தாக்கிய அப்துல் பாசித் நண்பர் அப்பாஸ் என்பவரது உறவுக்கார பெண்ணான அதிராம்பட்டினத்தை சேர்ந்த ஒருவருடன் ஹாஜா முகைதீன் தொடர்பு வைத்துக்கொண்டு பணம் கேட்டு மிரட்டி வந்ததாகவும்,இது தொடர்பாக அப்பாஸின் நண்பர்கள் அப்துல் பாசித் மற்றும் சபீர் அஹமது ஆகியோர் ஹாஜா முகைதீன் வீட்டிற்குச் சென்று கேட்டபோது, இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு அப்துல் பாசித், ஹாஜாமைதீனை பாட்டிலால் தாக்கியுள்ளார். இதில் 3 பேர் கஞ்சா போதையில் வந்துதான் நிருபரை தாக்கியுள்ளனர் என்பது தவறானது.
இந்த சம்பவத்தில் அப்துல் பாசித் கைது செய்யப்பட்டுள்ளார். மற்ற 2 பேர் தேடப்பட்டு வருகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஹாஜா முகைதீன் கூறும்போது…
காவல்துறை தரப்பில் என் மீது குற்றம் இருப்பதாகக் கூறி ஒரு உண்மைக்கு மாறான தகவலைக் கூறியதை கண்டு வேதனை அடைகிறேன்.அது முற்றிலும் பொய்.நான் சொல்வதுதான் உண்மையான தகவல்.சம்பந்தப்பட்ட 3 இளைஞர்களும் கஞ்சா போதையில் வந்துதான் என்னைத் தாக்கினர்.இதில் அப்துல் பாசித் ஏற்கனவே கஞ்சா வழக்கில் சிறைக்குச் சென்று வந்தவர் என்றார்.
நியூஸ் ஜெ தொலைக்காட்சி இப்போது அதிமுகவில் கலகம் செய்துவரும் எஸ்.பி.வேலுமணி,சி.வி.சண்முகம் ஆகியோர் கைவசம் உள்ளது.அவர்கள் இப்போது ஆளும்கட்சிக்கு ஆதரவாக இருக்கின்றனர்.இந்நிலையில், அவர்களிடம் வேலை செய்துவருபவருக்குப் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
இப்போது அவர்கள் தங்கள் ஊழியருக்கு ஆதரவாக இருப்பார்களா? அல்லது அரசாங்கத்துக்கு ஆதரவாகச் செயல்பட்டு ஊழியரை முடக்குவார்களா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
