ராம்ராஜ் காட்டனின் இரண்டு தொழிற்சாலைகள் – 2000 பேருக்கு வேலைவாய்ப்பு

சென்னை லீலா பேலஸ் ஐந்து நட்சத்திர விடுதியில் ஆகஸ்ட் 21 அன்று தமிழ்நாடு தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு 2024 நடைபெற்றது.தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாட்டில், ரூ.17,616 கோடி முதலீட்டில் 64,968 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய 19 தொழில் திட்டங்களையும், ரூ.51,157 கோடி முதலீட்டில் 41,835 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கக் கூடிய 28 தொழில் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

கடந்த 3 ஆண்டுகளில் ரூ.10 இலட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளோம். இதன் மூலம் 31 இலட்சம் பேர் வேலைவாய்ப்புப் பெற்றுள்ளனர் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

இம்மாநாட்டில், ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் இரண்டு புதிய தொழிற்சாலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலில் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

பெருந்துறை சிப்காட் வளாகத்திலும் மற்றும் திருப்பூர் இடுவம்பாளையம் பகுதியிலும் இந்த இரண்டு தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சனவரி 2024 சென்னை வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் ராம்ராஜ் காட்டன் நிறுவனம் சார்பில் ரூ.1,000 கோடிக்கான தொழில் முதலீடு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ராம்ராஜ் காட்டன் நிறுவனர் கே.ஆர் நாகராஜன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கி இருந்தார்.

அதன் ஒரு பகுதியாக நேற்று நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் இரண்டு தொழிற்சாலைகளை காணொலி மூலமாகத் திறந்து வைத்தார்.

நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ள இந்த இரண்டு தொழிற்சாலைகள் மூலமாக சுமார் 2,000 பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட உள்ளதாகவும், தொழில் முன்னேற்றத்தில் தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வதற்கு ராம்ராஜ் காட்டன் தொடர்ந்து செயல்படும் என்றும் நிறுவனர் கே.ஆர்.நாகராஜன் தெரிவித்தார்.

Leave a Response