
ஈரோடு சூளையில் இருந்த, கனிராவுத்தர் குளத்தில் வளர்ந்துள்ள முட்புதர்களால் மாயமானது.
தமிழகம் முழுவதும் நீர் ஆதாரமாக விளங்கி வரும், குளங்கள், குட்டைகள், ஆறுகள், கிணறுகளை மீட்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, ஆகாயத்தாமரை அகற்றுதல், கரைகளை பலப்படுத்துதல், ஆறு, வாய்க்காலை ஆழப்படுத்துதல் உள்பட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது.
ஆனால், ஆறு, வாய்க்காலை பாதுகாக்க வேண்டிய துறையான, பொதுப்பணித்துறையில், அமைச்சரை கொண்ட, ஈரோடு மாவட்டத்தில் பெரும்பாலான ஆறுகள், வாய்க்கால் ஆகாயத்தாமரையால் பொலிவிழந்து கிடக்கிறது.
ஈரோடு சூளையில் பொதுமக்களின் நீர் ஆதாரமாக விளங்கிய கனிராவுத்தர் குளம், பல ஆண்டாக முட்புதர்களால் நிரம்பி மாயமானது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “” ஈரோடு சூளையில் முன்னோர்கள் காலத்தில், கனிராவுத்தர் குளம் இருந்தது.
பழங்காலத்தில், இக்குளத்தில் மீன் பிடித்தும், குளித்தும், இப்பகுதி மக்கள் மகிழ்ந்தனர். சில ஆண்டாக, குளத்தில் வளர்ந்த ஆகாயத்தாமரை, செடி, கொடிகளால், கனிராவுத்தர் குளம் முற்றிலும் மாயமானது. பயனற்ற நிலையில் இருக்கும் கனிராவுத்தர் குளத்தை தூர்வார, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்ற அப்பகுதி மக்களின் கோரிக்கைகளை அரசு கண்டுகொள்ளவே இல்லை.
இதனால். கனிராவுத்தர் குளத்தை மீட்கக் கோரி, திங்கள்கிழமை முதல் குளம் மீட்பு இயக்கத்தினர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கனிராவுத்தர் குளம் மீட்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் நிலவன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகிகள் கண.குறிஞ்சி, பொன்னையன், சண்முகம், ரத்தினசாமி, காசியண்ணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இதுகுறித்து கனிராவுத்தர் குளம் மீட்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் நிலவன் கூறியது:
ஈரோடு கனிராவுத்தர் குளத்தில் உடைக்கப்பட்ட மதகு கட்டுமானத்தை பழைய அளவுக்கு உயர்த்திக் கட்டி நீரைத் தேக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குளத்தின் நீர் நிலையில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டடங்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.
தமிழ்நாடு பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத அனைத்து ஏரி, குளம், குட்டை, கண்மாய் ஆகிய நீர் நிலைகளை பாதுகாக்கவும், புதிய நீர்நிலைகளை உருவாக்கவும், ஒரு புதிய தொழில்நுட்ப வாரியத்தை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது என்றார்.
