
ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று சேலம் சென்று மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டம் நடத்தி, பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். இது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
அரசின் ஊரடங்குச் சட்டத்தையும், கொரோனா நோய்த் தொற்று தடுப்புக் கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் மீறிய செயல் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஏப்ரல் 15 ஆம் தேதி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவிருந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தக் கூடாது என்று அறிவுறுத்தியது காவல்துறை.
கொரோனா கட்டுப்பாட்டு விதிகளும் தனிநபர் இடைவெளியும் கடைபிடிக்கப்படும் என உத்தரவாதம் அளித்தும் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்படவில்லை. இதையடுத்து, காணொலிக் காட்சி மூலம் அந்தக் கூட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், சேலத்தில் ஏப்ரல் 17 அன்று கூட்டம் நடத்தியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. ஏப்ரல் 16 அன்று தலைமைச் செயலகத்தில் அமர்ந்து காணொலிக் காட்சி வழியாக மாவட்ட ஆட்சியர்களோடு கலந்தாலோசனை நடத்திய முதல்வர் அடுத்த நாளே சேலத்திற்கு வந்து அலுவலர்களை அழைத்து ஆய்வுக் கூட்டம் நடத்தவேண்டிய அளவுக்கு என்ன அவசியம் ஏற்பட்டது எனும் கேள்வி எழுந்துள்ளது.
ஊரடங்கு உத்தரவை மீறி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளைக் கொண்டு கூட்டத்தை நடத்திய தமிழக முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சேலம் மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் ராஜேந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பாரத்திபன் ஆகியோர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாநகர காவல் துறை ஆணையரிடம் மனு அளித்துள்ளனர்.
144 சட்டம் மற்றும் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தை மீறியுள்ள முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கோரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தி.மு.க தலைமையின் அனுமதியோடு நீதிமன்றத்திற்கும் செல்ல உள்ளதாக தி.மு.க மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


