தமிழக அரசு மறுப்பு திமுக அழைப்பு – ஏப்ரல் 15 பரபரப்பு

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசிக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். கொரோனா மருத்துவம் சார்ந்த விஷயம் என்பதால் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அவசியம் இல்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதில் அளித்தார்.

இதற்கிடையே தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை விமர்சித்தும், ஊரடங்கை நீட்டிப்பதற்கு மத்திய அரசின் முடிவுக்கு காத்திருப்பதா? என்பதைக் கண்டித்தும் முதலமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். கொரோனா விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் சந்தர்ப்பவாத அரசியல் நடத்துகிறார் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார்.

இந்தநிலையில் மக்களுக்கு தன்னார்வலர்கள், சமூக அமைப்புகள், அரசியல் கட்சிகள் நேரடியாக உதவி செய்யக்கூடாது. நிவாரணப் பொருட்களை அரசிடம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ள உத்தரவுக்கு மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

இந்தநிலையில், மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகள் குறித்து விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு தி.மு.க. ஏற்பாடு செய்து உள்ளது. இதுதொடர்பாக தி.மு.க. தலைமை அலுவலகம் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது…..

கொரோனா நோய்த் தொற்றில் மத்திய, மாநில அரசுகளின் அணுகுமுறைகள் குறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 15-ந்தேதி (புதன்கிழமை) காலை 10 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

பிரதம்ர் மோடி அனைத்துக்கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகும் தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தாமல் இருப்பதால் திமுக தாமே முன்வந்து அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இதனால் தமிழகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Response