முகமூடி அணிந்து தாக்குதல் பாஜக மாணவர் அமைப்பு அட்டூழியம்

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் திடீரென அமல்படுத்தப்பட்ட கடும் கட்டண உயர்வுகளைக் கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டங்களை நிறுத்தும்படி பாஜகவின் மாணவர் அமைப்பு ஏபிவிபி எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனாலும் மாணவர்கள் போராட்டம் தொடர்ந்தது.

டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக வளாகத்தில் நேற்று ஆசிரியர் சங்கம் சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. அப்போது முகத்தைத் துணியால் மறைத்தபடி கம்புகள், இரும்புக் கம்பிகளுடன் நுழைந்த ஏபிவிபி கும்பல் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த மாணவர்களைப் பயங்கரமாகத் தாக்கியது. ஏ.பி.வி.பி.கும்பல் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து விடுதிக்குள்ளும் நுழைந்து சூறையாடினர்.

இதைத்தொடர்ந்து பல்கலைக்கழக நிர்வாகம் காவல்துறைக்குத் தகவல் கொடுத்தது.அவர்கள் மாணவர்களின் மோதலைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஏ.பி.வி.பி. மாணவர்கள் தாக்கியதில் பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் ஐஸ் கோஷ் உள்பட பலருக்கு மண்டை உடைந்தது. இதில் 15 மாணவர்களுக்குக் கடும் காயம் ஏற்பட்டுள்ளது. இவர்களில் இருவரது உயிர் ஊசலாடுகிறது.

இந்த மோதல் தொடர்பாக காங்கிரசு தலைவர் ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்,மு.க.ஸ்டாலின், ப.சிதம்பரம் ஆகியோர் கடும் அதிர்ச்சியும், கண்டனமும் தெரிவித்து உள்ளனர்.

நேரு பல்கலைக்கழகத் தாக்குதல்களைத் தொடர்ந்து, டெல்லி காவல்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்ட 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள், போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து, மோதலை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். ஜாமியா மில்லியா, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பயிலும் மாணவர்கள் திரண்டு இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

அதேபோல், புனேவில் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி இன்ஸ்டிடியூட்டில் பயிலும் மாணவர்கள், டெல்லியில் நடந்த தாக்குதலைக் கண்டித்து போராட்டம் நடத்தினர். அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மும்பையில், பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் கேட்வே ஆப் இந்தியா முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Response