தமிழர்களுக்கு எதிராகப் பேசிய மஜத, பாஜக வைப் புறக்கணிப்போம்– பெங்களூரு தமிழ்ச்சங்கம் அறிவிப்பு.

கர்நாடக சட்டமேலவையில் நடந்த பெங்களூரு மாநகராட்சியை 3-ஆகப் பிரிப்பது தொடர்பான விவாதத்தின்போது, பாஜக, மஜத உறுப்பினர்கள் தமிழர்களை கடுமையாக விமர்சித்தனர். கர்நாடக சட்ட மேலவையில் ஏப்ரல் 27 அன்று நீடித்த விவாதத்தில் கலந்துகொண்டு மஜத உறுப்பினர் இ.கிருஷ்ணப்பா பேசியபோது…

பெங்களூரு மாநகராட்சியை எந்தக் காரணத்திற்காகவும் பிரிக்கக் கூடாது. 1960-களில் பெங்களூரில் தமிழர்களின் ஆதிக்கம் அதிகமிருந்தது. ராமசந்திரபுரம், ஓகலிபுரம், ஸ்ரீராமபுரம் போன்ற தமிழர் வாழும் பகுதிகளில் திமுக கொடி மட்டுமே பறந்து கொண்டிருந்தது. இங்குள்ள தமிழர்கள் கன்னடத்தில்கூடப் பேசுவதில்லை. எங்கும் தமிழ் ஒலி தான் கேட்கும்.

அன்றைய காலகட்டத்தில் கன்னடர்களால் பாகிஸ்தானுக்குக் கூடச் சென்றுவிட முடியும். ஆனால், பெங்களூரில் தமிழர்கள் அடர்த்தியாக வாழ்ந்துவந்த பகுதிகளில் கன்னடர்களால் நுழைய முடியாத பரிதாப நிலை இருந்து வந்தது.

இதைத் தொடர்ந்து, 1960-களில் வாட்டாள் நாகராஜ் போன்றோர் கன்னட சலுவளி கட்சியைத் தொடங்கி, கன்னடர்களின் உரிமையை நிலைநாட்டத் தொடங்கினர்.
என்பது உட்பட தமிழர்களுக்கு எதிராக நிறையப் பேசியிருந்தார், இதையொட்டிப் பேசிய பாஜக உறுப்பினரும் தமிழர்களுக்கு எதிராகப் பேசியிருந்தார்.
தமிழர்களுக்கு எதிரான மஜத, பாஜகவினரின் பேச்சுக்கு பெங்களூருத் தமிழ்ச்சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.பெங்களூருத் தமிழ்ச்சங்கத் தலைவர் கோ.தாமோதரன், செயளாளர் வா. சிரிதரன் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில்…
கர்நாடக உயர்நீதி மன்றத்தைக்கட்டியவர் ஆற்காடு நாராயணசாமி முதலியார் என்ற தமிழர், கர்நாடக தலைமைச் செயலகமான விதான சவுதாவைக் கட்டுவதற்கு அப்போதைய அரசின் தலைமைப் பொறியாளர் திரு. மாணிக்கம் முதலியார் என்ற தமிழரும் ஆயிரக்கணக்கான தமிழ் கூலித் தொழிளாளர்களும் காரணம் என்று அப்போதைய முதல்வர் கெங்கால் அனுமந்தையா நன்றியுடன் பலமுறை கூறியுள்ளார். மாநிலத்தின் மிக நீண்ட ரயில் பாதையை அமைத்துக் கொடுத்தவர் அண்ணாசாமி முதலியார் என்ற தமிழராவார். அண்மைக் காலத்தில் பெங்களூரிலுள்ள மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை அமைக்க பல கோடி மதிப்புள்ள நிலத்தை நன்கொடையாக வழங்கியவர் சின்னசாமி என்ற தமிழராவார். கன்னட இலக்கியத்திற்கு பெரும் பங்களிப்பைச் செய்தவர்களில் மாஸ்தி வெங்கடேச ஐயங்கார் போன்றவர்களின் பங்களிப்பினை யாரும் மறந்துவிட முடியாது.

இந்த வரலாற்றை எல்லாம் தெரியாமல் சிலர் தமிழர்களுக்கு எதிராக பேசி வருகிறார்கள். காவிரிக்கலவரத்தின்போது வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அப்போதைய ஆட்சியாளர்களை கடுமையாக கண்டித்ததை ஒரு சிலர் மறந்து பேசுகிறார்கள். தமிழர்கள் இதனை எல்லாம் நமக்கு விடப்பட்ட சவாலாக எதிர்கொண்டு ஒன்றுபட வேண்டும். தமிழர்களுக்கு எதிராக பேசுபவர்களை அந்த கட்சி தலைமை கண்டிக்காவிட்டால் அந்த கட்சிகளை நாம் புறக்கணிக்க வேண்டும். இது குறித்து இங்குள்ள தமிழ், தமிழர் அமைப்புக்கள் அனைவரும் கலந்து பேசி தேவையான உரிய நடவடிக்கைகளை எடுக்க இருக்கிறோம். இது தொடர்பாக விரைவில் அனைத்து தமிழ் அமைப்புக்களின் கூட்டம் கூட்டப்பெற்று அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று அவர்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

Leave a Response