
நான், சலீம் ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து அனைவரும் குடும்பத்துடன் ரசிக்கும் வகையில் நல்ல கதைகளை தேர்ந்து எடுத்து நடித்து வரும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்திருக்கும் இந்தியா பாகிஸ்தான் படம் வெளியீட்டுக்குத் தயாராகிவிட்டது. இந்தப் படத்தில் நாயகியாக சுஷ்மாராஜ் என்கிற புதுமுகம் நடித்திருக்கிறார்.
‘இந்தியா பாகிஸ்தான்’ படம் முழுக்க நகைச்சுவை கலந்து தயாராகியிருக்கிறதாம். நகைச்சுவை கலந்து சொல்லப்பட்டிருப்பது ஒரு காதல் கதைதானாம். தன்முனைப்பு (ஈகோ) என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள விசயம். இந்தப் படத்தில் காதலோடு தன்முனைப்பும் கலந்திருப்பதால்தான் படத்துக்கு இப்படி ஒரு பெயரை வைத்திருக்கிறார்களாம். அறிமுக இயக்குனர் ஆனந்த் இயக்கியுள்ள இப்படத்தை விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன் நிறுவனம் தயாரித்துள்ளது.
தொடக்கத்திலிருந்தே தயாரிப்புப் பொறுப்பையும் தன்னிடமே வைத்துக் கொள்கிறார் விஜய் ஆண்டனி. அப்போதுதான் தனக்குச் சரியானவற்றைத் தேர்ந்தெடுத்து நடிப்பதோடு உருவாக்கத்திலும் தனக்கு நன்றாக வருகிற விசயங்களை வைத்துக்கொள்ள முடியும் என்பது அவருடைய கணக்கு. இதுதான் அவருடைய வெற்றியின் ரகசியம் என்று சொல்கிறார்கள்.
முந்தைய படங்களைக் காட்டிலும் இந்தப் படத்தில் நடனத்தில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கிறாராம் விஜய் ஆண்டனி.
இந்தப்படம் தணிக்கைகுழுவினரால் பாராட்டப்பட்டு யு சான்றிதழ் வாங்கியிருக்கிறது. அதனால் கூடுதல் மகிழ்ச்சியில் இருக்கிறார் விஜய் ஆண்டனி.
ஸ்ரீ கிரீன் நிறுவனம் வெளியீட்டில் ‘இந்தியா பாகிஸ்தான்’ விரைவில் வெளிவர உள்ளது.
