
கேரள மாநிலத்தில், தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, பாலக்காடு மாவட்டம், முதலமடையில் ஞாயிற்றுக்கிழமை பேரணி நடைபெற்றது.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் முதலமடை, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் வசித்து வருகின்றனர். இங்கு, அனுமதியில்லாமல் 74 கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்தக் கல்குவாரிகளில் வைக்கப்படும் வெடியால் ஏற்படும் அதிர்வுகளால் முதலமடை கிராமத்தில் உள்ள பல வீடுகள் சேதமடைந்துள்ளன. இதுகுறித்து, கேரள அரசுக்கும், அதிகாரிகளுக்கும் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கடந்த மாதம் 25-ஆம் தேதி அதிக பாரம் ஏற்றி வந்து விபத்தை ஏற்படுத்த முயன்ற கல் குவாரி லாரியை பொதுமக்கள் சிறைபிடித்தபோது, கல்குவாரி ஆட்களால் பொதுமக்கள் தாக்கப்பட்டுள்ளனர். இதைக் கண்டித்து கடந்த 26-ஆம் தேதி மீண்டும் இப்பகுதி மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களை நூற்றுக்கும் மேற்பட்ட குண்டர் படையினர் மீண்டும் தாக்கினர்.
இதுகுறித்து கொல்லங்கோடு காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், பொதுமக்கள் மீதான தாக்குதலைக் கண்டித்தும், கல்குவாரிகளை மூடக் கோரியும், கேரளத்தில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளை தமிழகத்துடன் இணைக்க வலியுறுத்தியும், ஞாயிற்றுக்கிழமை முதலமடையில் பேரணி நடைபெற்றது.
இந்தப் பேரணியில் 1,500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கேரள காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் வி.டி.பல்ராம் உள்பட பல்வேறு சமூக அமைப்புகள், இயற்கை ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி நாளேட்டில் இந்தச் செய்தி வந்திருக்கிறது. கேரளாவைச் சேர்ந்த காங்கிரசு சட்டமன்ற உறுப்பினரே இந்தக்கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். தமிழக காங்கிரசு மட்டுமல்ல அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இதற்கு ஆதரவு தெரிவிக்கவேண்டுமென்பது தமிழ் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.


