விஜயகாந்த் படப்பெயரில் நாயகன், அவர் தொகுதி பெயரில் படம்.

தேவர்மகன், நாட்டாமை, என் ராசாவின் மனசிலே, பருத்திவீரன் போன்ற படங்களை போல முழுக்க முழுக்க கிராமத்து கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் படங்கள் மற்றும் சிறந்த கிராமத்துக் காதல், மோதல் கதை  மக்களுக்கு நிச்சயம் பிடித்த படமாகவும் வெற்றிப் படமாகவும் இருக்கும் என்பதால் அதுபோலவே  விருத்தாசலம் படத்தை எடுத்திருக்கிறார்கள்.

லட்சுமி அம்மாள் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக பி.செந்தில்முருகன் இந்தப்படத்தைத் தயாரித்திருக்கிறார்.

இந்தப் படத்தில் விருதகிரி என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டத்தில் கச்சிராயநத்தம் என்ற கிராமத்தின் தலைவராக இருந்தவர். அப்போது அவரது சிறந்த நிர்வாகத்திற்காக ஜனாதிபதி பிரதீபா பாட்டிலிடம் விருது பெற்றவர்.

கதாநாயகிகளாக ஸ்வேதா, சமீரா, ஷெரீன் தாஹா ஆகிய மூன்றுபேர் நடிக்கிறார்கள். இவர்களோடு  சம்பத்ராம், பாவாலட்சுமணன், காதல்சரவணன், வெண்ணிலா கபடிக்குழு ஜானகி, மதுபானக்கடை ரவி, நெல்லை சிவா, ஆர்.என்.ஆர்.மனோகர், சுதா, இளங்கோ, அபிஷேக், நிருபமா ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு  உமாசங்கர் ,  சிவநேசன் ,  ஸ்ரீராம் இசையில் இளையகம்பன் பாடல்களை  எழுதியிருக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி  இயக்கியிருப்பவர்   ரத்தன்கணபதி.

இந்தப்படம் ஒரு நாயகன் மூன்று கதாநாயகிகளை கொண்ட நான்கு முனைக் காதல் கதையாக உருவாக்கப்பட்டுள்ளதாம்.

நாயகனின் மனதில் மறைந்து கிடக்கும் காதல் என்ன? யார் மீது..? எப்படி, ஏன் என்பதுதான் கதை. சிறுவன் விருதகிரி வாழ்வில் எதிர் பாராத ஒரு சம்பவம் நடக்கிறது. அதனால் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் தூக்கி வீசப்படுகிறான். அவன் குற்றவாளியாகக் காரணம் என்ன? அங்கு அவன் யாரை சந்திக்கிறான். சீர்திருத்தப் பள்ளியில் சிறுவன் திருந்தினானா…அவன் வாழ்வில் என்ன நடந்தது? ஆகிய எல்லாக் கேள்விகளுக்குமான விடையாக இந்தப்படம் இருக்கும் என்கிறார் இயக்குனர்  ரத்தன்கணபதி.

படத்தின் பெயர் மட்டுமல்ல  மொத்தப் படப்பிடிப்பும் விருதாச்சலத்திலேயே படமாக்கியிருக்கிறார்களாம்.

விருதகிரி படமெடுத்த விஜயகாந்த், விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார்.

விருத்தாசலம் படத்தில் நடித்திருக்கும் விருதகிரியும் வெற்றிபெறுவார் என்கிறார்கள்.

Leave a Response