
மாநில சுயாட்சி, சமூக நீதி, மதநல்லிணக்கம் ஆகியவற்றை வலியுறுத்தி ஈரோடு மண்டல தி.மு.க. மாநாடு மார்ச் 24,25 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றன.
காவிரி மேலாண்மை வாரியம் தவிர வேறு எந்த அமைப்பையும் ஏற்கமாட்டோம் என்கிற சிறப்புத்தீர்மானம் உட்பட 50 தீர்மானங்களை நிறைவேற்றி, மோடி அரசுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்து நடைபெற்ற ஈரோடு மண்டல தி.மு.க. மாநாட்டில் பல்வேறு தலைப்புகளில் தி.மு.க. பேச்சாளர்கள் பேசினார்கள்.
அவர்கள் பேச்சு பெரும்பாலும் தமிழக அரசியலையும் குறிப்பாக கமல், ரஜினி ஆகியோரைச் சுற்றியும் இருந்தது.
வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான வாகை சந்திரசேகர் பேசும்போது,
60 வயதிலும், 69 வயதிலும் சிலர் அரசியலில் வெற்றிடம் இருப்பதாகக் கூறி வருகிறார்கள். இவர்கள் சினிமாவில் கிடைத்த மாயையை வைத்து அரசியல் வெளிச்சம் கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால் தலைவர் கருணாநிதி சமூக வளர்ச்சிக்கான பகுத்தறிவினை திரைப்படங்கள் மூலம் பரப்பியவர். எனவேதான் அவர் வெற்றி பெற்றார். கருணாநிதியைத் தலைவராக ஏற்றுக்கொண்ட எம்.ஜி.ஆர். மட்டுமே அரசியலில் வெற்றி பெற முடிந்தது. தற்போது வெற்றிடம் இருக்கிறது என்று 60 வயதிலும், 69 வயதிலும் கூறி வருபவர்கள் தேர்தலில் வெற்றி பெறவில்லை என்றால் அவர்கள் நடிக்கச் சென்று விடுவார்கள். ஆனால் எப்போதும் மக்களோடு இருப்பவர் மு.க.ஸ்டாலின் என்று குறிப்பிட்டார்.
வி.பி.ராஜன் பேசும்போது,
தமிழக அரசியலில் எப்போதும் வெற்றிடம் இருந்ததில்லை. தலைவர் கருணாநிதி இருக்கிறார். அவருடன் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார். அவருக்கு பிறகும் தயாநிதி ஸ்டாலின் இருக்கிறார். எனவே வெற்றிடம் என்று யாரும் கூற வேண்டியதில்லை என்றார்.
காற்றின் வெற்றிடத்தை காற்று நிரப்பும், ஒரு டாக்டரின் வெற்றிடத்தை டாக்டர் நிரப்புவார். அது எப்படி அரசியல் வெற்றிடத்தை நடிகர் நிரப்ப முடியும், வெற்றிடம் தமிழக அரசியலில் இல்லை. வெற்றிடம் இருக்கிறது என்று கூறுபவர்களின் மண்டையில் வெற்றிடம் இருக்கிறது என்றார் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்.
தமிழன் பிரசன்னா பேசும்போது, மு.க.ஸ்டாலின் கட்டி முடிக்கப்பட்ட கோபுரமாக இருக்கிறார். அந்த கோபுரத்தில் காற்றடித்து பறந்து வந்த சில குப்பைகள் தற்போது மக்கள் தங்களைத்தான் வணங்குகிறார் என்று கூறுகிறார்கள். ஆனால் குப்பை பறந்து சென்றுவிடும். கோபுரம் நிலையாக இருக்கும் என்றார்.
இவ்வாறு கமல், ரஜினியைத் தாக்கி, பேச்சாளர்கள் பேசினார்கள்.


