
சின்னத்திரை நடிகர் தீபக். நாயகனாக நடிக்கும் முதல்திரைப்படம் இது. படத்திலும் நாயகன் தீபக்குக்கு தொலைக்காட்சித்தொகுப்பாளர் வேடம்.
புகழ்பெற்ற தொலைக்காட்சியில் புகழ்பெற்ற நிகழ்ச்சியைத் தொகுத்துவழங்க ஆசைப்படும் அவருக்கு இரவு பதினொருமணிக்கு ஒளிபரப்பாகும் பாலியல்தொடர்பான நிகழ்ச்சியை தொகுத்துவழங்கும் வாய்ப்புதான் கிடைக்கிறது. அதற்குக் காரணமாக இன்னொரு தொகுப்பாளரே இருக்கிறார்.
இன்னொரு பக்கம் திருமணத்துக்காகக் கடன்வாங்கி அதைத் திருப்பிக்கட்டமுடியாமல் தவிக்கிறார். மூன்றாவதாக காதலியே அவருக்குத் துரோகம் செய்கிறார். ஒரேநேரத்தில் இப்படி பல சிக்கல்களில் மாட்டிக்கொள்ளும் நாயகன் மனம்வெறுத்துப் போய் நண்பர்களோடு சேர்ந்து மதுக்குடித்துவிட்டு அட்டகாசம் செய்கிறார். இரவு நுங்கம்பாக்கத்தில் குடிக்கிறவர்கள் காலையில் பார்த்தால் ராயபுரம் காவல்நிலையத்தில் இருக்கிறார்கள். இடையில் நடக்கும் நிகழ்வுகள் அவர்கள் வாழ்க்கையைப் புரட்டிப்போடுகிறது.
போட்டியாக இருக்கும் நிகழ்ச்சித்தொகுப்பாளர், வட்டிக்கடைக்காரர் ஆகிய இருவரும் மர்மமான முறையில் மரணமடைகிறார்கள். அதனால் சிக்கல் தீர்ந்து சந்தோசமாக இருக்கவேண்டிய நாயகன் தீபக்குக்கு மேலும் சிக்கல் ஏற்படுகிறது. ஏன் அப்படி? என்பதுதான் படம். நாயகனாக பெரியதிரைக்கு வந்திருக்கும் தீபக், நடிப்பில் தன்னை மேம்படுத்திக்கொள்ளவேண்டும். பரபரப்பாக ஒடவேண்டிய நேரத்திலும் அவர் முகத்தில் பதட்டத்தைக் காணமுடியவில்லை.
காதலாகிக் கசிந்துருகி காதலனுக்காகப் பழிபாவங்களையும் ஏற்றுக்கொள்ளவேண்டிய பாத்திரத்தில் நாயகி நேகா நடித்திருக்கிறார். அதை அவர் நன்றாகவே செய்திருக்கிறார். நாயகியின் குடும்பம் குறிப்பாக அவருடைய அண்ணன் கதாபாத்திரத்தை சிரிக்கவைப்பதற்கென்றே படைத்திருக்கிறார்கள். பார்க்கும்போது சிரிப்பாகத் தோன்றும் அக்காட்சிகள் யோசித்தால் ரசிக்கமுடியாத காட்சிகள்.
நாயகன் பாலியல்சிக்கல்களுக்குத் தீர்வுசொல்லும் நிகழ்ச்சியைத் தொகுத்துவழங்குவது ஏதோ பெரியபாவச்செயல்போலவே சித்தரிக்கிறார்கள். தொலைக்காட்சியிலிருந்து வந்தவர்களே தொலைக்காட்சி நிகழ்ச்சியை இவ்வளவு மோசமாகச் சித்தரித்திருப்பது எதனால் என்று புரியவில்லை.
இடைவேளைக்குப் பிறகு வருகிற நான்கடவுள் ராஜேந்திரன் படத்தைக் காப்பாற்றுகிறார். வாழ்ந்துகெட்ட ரவுடி அவர். அவருக்குக் கொலைசெய்யும் வேலை கொடுக்கப்பட்டதும் அதை நினைத்து அவர் உருகும்காட்சியிலிருந்து கடைசிவரை சிரிக்கவைக்கிறார். திரைமுழுக்கத் தெரிகிற மாதிரி அவர் முகத்தைக் காட்டுவதைத் தவிர்த்திருக்கலாம். அதுவும் அவ்வளவு பெரியதிரையில் அவர் சிரிப்பதையும் அழுவதையும் நெருக்கமாகப் பார்க்கமுடியவில்லை.
நாயகன் தீபக்கின் நண்பர்களாக வருகிற சென்ட்ராயன், குமரவேல் ஆகியோர் தங்கள் பங்கைச் சரியாகச் செய்திருக்கிறார்கள். சிங்கம் சிங்கம் என்று அழைத்துக்கொண்டு சில காட்சிகளில் வருகிற மைகாமகேஷ் நன்றாகச் செய்திருக்கிறார். அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. எம்.எஸ்.பாஸ்கர் மனோபாலா, பாண்டியராஜன் சுப்புபஞ்சு, கானாபாலா என்று படத்தில் நிறையநடிகர்கள் இருக்கிறார்கள். அவரவர்க்குக் கொடுக்கப்பட்ட வேலைகளைச் சரியாகவே செய்திருக்கிறார்கள். மிரட்டுவதற்காக கைபேசியில் எடுக்கப்பட்ட காணொளி தெளிவாக இல்லை என்று எம்.எஸ்.பாஸ்கர் சண்டைபோடும் காட்சியில் வெடிச்சிரிப்புகள் கேட்கின்றன.
தொலைக்காட்சித் தொடர்களை இயக்கியவர் இயக்கியிருக்கும் படமென்பது படம் நெடுக அவ்வப்போது தெரிந்துகொண்டேயிருக்கிறது. திரைக்கதை மட்டுமின்றி பின்னணிஇசையினாலும் அந்த எண்ணம் தோன்றுகிறது. அது படத்துக்குப் பலவீனமாக இருக்கிறது.
படம் முழுக்க மது, இரட்டைஅர்த்த வசனங்கள், வட்டிக்கடைக்காரர், தன்னிடம் பணம் வாங்கிவிட்டுச் சரியாகத் திருப்பித் தராதவர்களுக்குக் கொடுக்கும் தண்டனை கடைசியில் அவருக்குக் கிடைக்கும் தண்டனை, நாயகியின் குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகள் ஆகிய எல்லாமே தரம்குறைந்திருப்பதும் படத்தில் எல்லாக்காட்சிகளிலும் யாராவது எதையாவது பேசிக்கொண்டேயிருப்பதும் இயக்குநருக்குப் பெருமை சேர்ப்பதாக இல்லை.
