விடுதலைப்புலிகள் விட்ட இடத்திலிருந்து தொடங்கவேண்டிய தேவை இருக்கிறது – பொ.ஐங்கரநேசன் பரபரப்புப் பேச்சு

யாழ்ப்பாணத்தில் சீ.வி.விக்னேசுவரன் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதிலிருந்து, ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தை மாவீரர் நினைவைப் போற்றும் வகையில் மரநடுகை மாதமாகக் கடைபிடித்து வருகிறது.

கிளிநொச்சியில் நவம்பர் 1 அன்று வட மாகாண சபையின் மரம் நடுகை மாத தொடக்க நிகழ்வு நடைபெற்றது.

முதல்வர் விக்னேசுவரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட இந்நிகழ்வுக்குத் தலைமையேற்று உரையாற்றினார் அமைச்சர் பொ.ஐங்கரநேசன். அவர் உரையில்,

பவுன் கொடுத்தோம்,தோடு கொடுத்தோம், தாலிகொடுத்தோம் ஆகவே விடுதலையை வாங்கித் தாருங்கள் என்றுதான் நாங்கள் விடுதலைப் புலிகளைப் பார்த்துக் கேட்டோமே தவிர நாங்கள் எவரும் பங்களிப்பவர்களாக மாறவில்லை.

அதே நிலைமைதான் இன்றும் நீடிப்பதாக நான் கருதுகிறேன். எனவேதான் எந்தவொரு செயற்பாட்டிலும் நாங்கள்அத்தனைபேரும் ஒன்றாக பங்கேற்க வேண்டும் என்று சொல்லி கேட்கின்றேன்.

விடுதலைப்புலிகள், வனவளப் பிரிவு என்று ஒன்றை வைத்து இயற்கையைப் பாதுகாத்தார்கள் எனவே நாங்களும் அவர்கள் விட்ட இடத்தில் இருந்து தொடங்க வேண்டிய தேவை இருக்கிறது.

நாங்கள் இங்கே மரங்களை நாட்டிக்கொண்டிருக்கின்றோம் கிளிநொச்சியில் இரணைமடுவை கடந்து இருக்கின்ற வனங்களில் பெருமளவில் மரங்கள் வெட்டப்பட்டுக்கொண்டிருக்கிறது. எனவே அமைச்சர் என்ன செய்கின்றார்?, அமைச்சு என்ன செய்கிறது? வடக்கு மாகாண சபை என்ன செய்கிறது? என்று கேள்வி கேட்கலாம்.

கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் திகதி நாங்கள் மரம் நடுகையில் ஈடுப்பட்டோம், ஆனால் அன்றைய தினம் இரவு பலரது வீடுகள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டது.

அதன் பின்னர்தான் நாம் தீர்மானித்தோம் நாங்கள் எவரது நினைவாகவும் மரங்கள் நடுவதனை எவரும் தடை செய்ய முடியாது இது எங்களுடைய உரிமை.

ஆகவே இதனை ஒரு அங்கீகாரம் பெற்ற நிகழ்வாக, மாதமாக பிரகடனம் செய்ய வேண்டும் என்ற வகையில் 2014 ஆம் ஆண்டு மாகாண சபையில் கார்த்திகைத் திங்களை மரநடுகை மாதமாகப் பிரகடனம் செய்தோம்.

ஏராளமான பொது நிறுவனங்கள் அமைப்புகள் மரநடுகையை ஒரு இயக்கமாக முன்னெடுத்து வருவதனை நாம் காண்கின்றோம்.
எங்களுடைய மரடுகை மாதமும் பொது மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியதை நாம் வெற்றியாகவே பார்க்கின்றோம்.

மேலும் இந்த நிகழ்வை வட மாகாண சபை செய்கின்றது என்பதற்காக இது எங்களுடையது அல்ல, அமைச்சு முன்னெடுக்கிறது என்பதற்காக அமைச்சினுடையது அல்ல,அமைச்சர் முன்னிற்கின்றார் என்பதற்காக ஐங்கரநேசனுக்குரியது அல்ல,
இது ஊர் கூடித் தேர் இழுக்கின்ற நிகழ்ச்சி, வெளியே பார்வையாளர்களாக நின்று கல்லெறிந்து விட்டுப்போகலாம் ஆனால் ஒவ்வொன்றையும் நடைமுறைப்படுத்தி பார்க்கின்ற போதுதான் இதிலுள்ள சிரமங்கள் அத்தனையும் தெரியும், எனவே நீங்கள் ஒவ்வொருவரும் நடுகின்ற ஒவ்வொரு மரத்தையும் பாதுகாக்கின்ற பொறுப்பை ஏற்றுக்கொள்ளுங்கள் என்றார்.

Leave a Response