வந்தே மாதரம் கட்டாயம் – ஒன்றிய அரசு உத்தரவு

ஒன்றிய அரசு மற்றும் ஆளுநர் அலுவலகங்களுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம்,2026 ஜூலை 9 ஆம் தேதி ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.அதில் தேசியப்பாடல் மற்றும் தேசியகீதத்தை இசைப்பது,பாடுவது தொடர்பான விதிகளை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.எந்தெந்த நிகழ்வுகளில் தேசியப்பாடல்,தேசியகீதம் கட்டாயம் பாடப்பட, இசைக்கப்பட வேண்டும் என்பதற்கான முழுமையான பட்டியல் அந்த உத்தரவில் இடம்பெற்றுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது….

ஒன்றிய, மாநில அரசு சார்பில் நடைபெறும் விருது வழங்கும் விழாக்கள்,அரசு நடத்தும் அதிகாரப்பூர்வ விழாக்களுக்கு குடியரசுத்தலைவர் வரும்போதும்,அங்கிருந்து புறப்படும்போதும் தேசியப்பாடல் கட்டாயமாகப் பாடப்பட வேண்டும்.அகில இந்திய வானொலி மற்றும் தொலைக்காட்சி வழியாகக் குடியரசுத்தலைவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதற்கு முன்பும் பின்பும் தேசியப்பாடல் பாடவேண்டியது கட்டாயம்.

ஆளுநர்கள்,துணை நிலைஆளுநர்கள் அந்தந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்குள் நடக்கும் அதிகாரப்பூர்வ அரசு விழாக்களுக்கு வரும்போதும்,அங்கிருந்து புறப்படும்போதும் தேசியப்பாடல் கட்டாயமாக பாடப்பட வேண்டும்.அணிவகுப்புக்கு தேசியக்கொடி கொண்டு வரப்படும்போதும் பாடுவது அவசியம்.தேசியப்பாடல், தேசியகீதத்தைப் பாடும்போதோ இசைக்கும்போதோ,அவற்றின் சரியான உரை/வரி வடிவம்,உச்சரிப்பை துல்லியமாகப் பின்பற்றவேண்டும்.

சில மாநிலங்களில்,தேசிய கீதம்/தேசியப்பாடலுடன் சேர்த்து மாநிலப்பாடலும் பாடப்படுகிறது.இந்தச்சூழலில் மாநிலப்பாடல் முதலில் பாடப்படலாம்.இதைத்தொடர்ந்து வந்தேமாதரம் தேசியப்பாடலும் தேசியகீதமும் ஒன்றாகவே இசைக்கப்பட வேண்டும்.மேலும் முதலில் தேசியப்பாடல்,அதைத் தொடர்ந்து தேசியகீதம் பாடப்படவேண்டும்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இதற்குமுன்பு,கடந்த ஜனவரி 28 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவில்,தேசியப்பாடலைப் பாடுவதற்கான முதல் நெறிமுறைகளை உள்துறை அமைச்சகம் வழங்கியது.அதன்படி,குடியரசுத் தலைவரின் வருகை,மூவர்ணக் கொடி ஏற்றுதல் மற்றும் ஆளுநர்களின் உரைகள் போன்ற அதிகாரப்பூர்வ விழாக்களில்,3 நிமிடங்கள் 10 விநாடிகள் கால அளவு கொண்ட அதன் 6 சரணங்கள் பாடப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.

தேசியப்பாடல் பாடப்படும் போது,அங்கிருக்கும் அவையினர் எழுந்து நின்று மரியாதை செலுத்தவேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.தற்போது ஒன்றியஅரசு ‘வந்தே மாதரம்’ பாடலின் 150 ஆவது ஆண்டைக் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.தாய்நாட்டுக்குச் செலுத்தும் வணக்கமாகவும்,உரியமரியாதையுடனும், ஒழுக்கத்துடனும் கூட்டாகப் பாடும்வரை,மக்கள் இந்த தேசியப்பாடலை பாட எந்தத் தடையும்இல்லை என்று அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

Leave a Response