
தமிழ்நாடு முதல்மைச்சராக மு.க.ஸ்டாலின் 2021 மே 7 ஆம் தேதி பதவியேற்றவுடன்,நகரப் பேருந்துகளில்
பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தை அறிமுகம் செய்தார்.
அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் இயக்கப்படும் 9,000 நகரப் பேருந்துகளில் 7,200-க்கும்மேற்பட்ட சாதாரண
கட்டணப் பேருந்துகளில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டது.
இதன்படி,சென்னையில் 1,559 சாதாரண கட்டணப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்கின்றனர். நகர்ப்புறங்களில் வெள்ளைப் பலகை கொண்ட பேருந்துகளிலும்,கிராமப்புறங்களில் நகரப் பேருந்துகளிலும்
இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதற்கு பெண்களிடம் வரவேற்பு கிடைத்ததை அடுத்து,திருநங்கைகள்,மாற்றுத் திறனாளிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.இதனால்,அரசுப்பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கையும் 62 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
இந்தப் பேருந்துகளை எளிதில் அடையாளம் காணும் வகையில்,மகளிர் விடியல் பயணம் என்று பெயரிட்டு,
பேருந்துகளின் முன்னும்,பின்னும் பலகை அல்லது டிஜிட்டல் பலகை இடம்பெற்றன.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு,தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு,மகளிர் இலவச பயணத் திட்டப்
பேருந்துகளில்,‘விடியல்’என்ற சொல் நீக்கப்பட்டு,‘மகளிர் பயணம்’ என்று மட்டும் உள்ளது.தமிழகத்தில்
இயக்கப்படும் அனைத்து நகரப் பேருந்துகளிலும்,உடனடியாக பெயர் மாற்றம் செய்யுமாறு போக்குவரத்து கிளை மேலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது,இது மகளிருக்கான பயணம்.எனவே,மகளிர் பயணம் என்று பெயரிடப்பட்டுள்ளது என்றார்.
திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு இதுகுறித்துக் கூறியிருப்பதாவது….
பெயரை மாற்றலாம்.வரலாற்றை மாற்றமுடியாது.மகளிரின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய ‘மகளிர் விடியல் பயணம்’ திட்டத்தின் பெயரை மாற்றுவது,மக்கள் நலனுக்கான நிர்வாக நடவடிக்கை அல்ல;அரசியல் அடையாளங்களை அழிக்கும் முயற்சி மட்டுமே.ஒரு திட்டத்தின் வெற்றியை அதன் பெயர் தீர்மானிக்காது;அது மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்திய முன்னேற்றம்தான் தீர்மானிக்கும்.பெயர் மாற்றங்களில் செலவிடும் நேரத்தையும் ஆற்றலையும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் புதிய திட்டங்களிலும், சேவைகளை வலுப்படுத்துவதிலும் செலவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
2026 மே 10 ஆம் தேதி தமிழ்நாட்டில் புதிய ஆட்சி அமைந்ததுமே, தமிழ்நாடு விடியலை இழந்து இருட்டுக்குள் போய்விட்டது.அதைக் குறிக்கும் விதமாகவே பேருந்துகளில் இருந்த விடியலும் நீக்கப்பட்டுள்ளது.அதையும் அவர்களே செய்துள்ளார்கள் என்கிற விமர்சனங்களும் சமூக வலைதளங்களில் வந்து கொண்டிருக்கின்றன.


