தமிழ் இனவெறியன் என்று சொல்வதில் பெருமைப்படுகிறேன் – சீமான் அறிவிப்பு

நாம் தமிழர் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் மார்ச் 13 ஆம் தேதி நடந்தது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாம் தமிழர் கட்சி சார்பில் சட்டமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். எங்கள் கட்சிக்கு இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இதனை மக்களிடம் கொண்டு செல்வது குறித்து யுக்தி வகுக்கப்பட்டுள்ளது.

நாங்கள் பிற கட்சிகளைப் போல் தேர்தல் அறிக்கையை வெளியிடாமல், எங்களது கட்சியின் செயல்பாட்டுக்கான வரைவு முடிவை வருகிற 20-ந் தேதி வெளியிட்டு, பிரசாரத்தை தொடங்க உள்ளோம்.

விகிதாச்சார வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் உறுப்பினர்களை தேர்வு செய்ய வேண்டும். இலவசங்களைக் கொடுத்து மக்களை ஏமாற்றுவதைத் தடுக்க வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சுத்தமான குடிநீர், கல்வி, சுகாதாரம் ஆகிய மூன்றை மட்டுமே இலவசமாக வழங்குவோம். தமிழ்நாட்டை தமிழரே ஆளவேண்டும்.

என்னை சாதி, மதவெறியன் என்று சொல்லாமல், தமிழ் இனவெறியன் என்று சொல்வதில் பெருமைப்படுகிறேன். தஞ்சையில் விவசாயி பாலன் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விவசாயி பாலனுக்கு நடிகர் விஷால் நிதி உதவி அளித்து இருப்பது பாராட்டுக்குரியது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response