தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக்கோரி வழக்குரைஞர்கள் போராட்டம்

உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட 44 வழக்குரைஞர்களை, காவல்துறையினர் மார்ச் 9 புதன்கிழமை கைது செய்தனர்.


உயர் நீதிமன்றத்தில் தமிழ் மக்கள் இயக்கம் என்ற அமைப்பின் சார்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், பல்வேறு அமைப்புகள் கலந்துகொண்டன. இடைநீக்கம் செய்யப்பட்ட வழக்குரைஞர்கள் பகத்சிங், எழிலரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தின்போது, உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்றும், தமிழ் தெரியாத நீதிபதிகள் பதவி விலக வேண்டும் என்றும் வழக்குரைஞர்கள் கோஷம் எழுப்பினர். அப்போது, அனுமதி பெறாமல் நடத்தப்படும் போராட்டத்தை கைவிடுமாறு போலீஸார் எச்சரித்தனர். இதற்கு, வழக்குரைஞர்கள் தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

வழக்குரைஞர்களின் கைகளில் இருந்த கருப்புக் கொடிகளை போலீஸார் பறிக்க முற்பட்டபோது, வழக்குரைஞர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் அவர்களை கைது செய்ய முயன்றனர். அப்போது, சில வழக்குரைஞர்கள் போலீஸ் வாகனத்தில் ஏறுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சாலையில் அமர்ந்தனர். தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட 2 பெண் உள்பட 44 வழக்குரைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.

Leave a Response