ஒடிசா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் தோல்வியைச் சந்தித்தது. இதையடுத்து, கடந்த 24 ஆண்டுகளாக ஒடிசாவின் முதலமைச்சராக இருந்துவந்த நவீன் பட்நாயக், பதவி இழந்தார்.
அதேபோல் மக்களவைத் தேர்தலிலும் மொத்தம் உள்ள 21 தொகுதிகளில் பாஜக 20 தொகுதிகளையும், காங்கிரசு ஒரு தொகுதியையும் வென்றன.
ஆளும் கட்சியாக இருந்த பிஜூ ஜனதா தளம் கட்சியால் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியவில்லை.
ஆனால் மாநிலங்களவையில் பிஜூ ஜனதாதளத்திற்கு 9 உறுப்பினர்கள் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக பா.ஜ.க வுக்கு மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாத நிலையில் பல சட்டங்கள் நிறைவேற பிஜூ ஜனதா தளம் ஆதரவு முக்கியமாக இருந்தது.
இப்போது சட்டப்பேரவைத் தேர்தலில் தோற்றதால் இனிமேல் பா.ஜ.க வுக்கு ஆதரவு இல்லை என்று பிஜூஜனதா தளம் அறிவித்து உள்ளது.
இது தொடர்பாக பிஜூஜனதா தளம் கட்சியின் மாநிலங்களவைத் தலைவர் சஸ்மித் பத்ரா கூறுகையில்…
இந்த முறை எங்கள் கட்சி உறுப்பினர்கள் பிரச்சினைகளை மட்டும் பேசுவதோடு நின்றுவிடாமல், ஒடிசாவின் நலனை ஒன்றிய பாஜக அரசு புறக்கணித்தால் போராட்டம் நடத்தும். மேலும் ஒடிசாவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் கோரிக்கையையும் வலுவாக வலியுறுத்துவோம். நிலக்கரி ராயல்டியை திருத்தி அமைக்க வேண்டும் என்ற ஒடிசாவின் கோரிக்கை, கடந்த 10 ஆண்டுகளாக பாஜக அரசால் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இந்த கோரிக்கையையும் இம்முறை மிகத் தீவிரமாக எடுத்துவைப்போம். இனி பாஜகவுக்கு எங்களின் ஆதரவு இல்லை. தேசிய சனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு என்ற கேள்விக்கே இடமில்லை. இனி நாங்கள் எதிர்க்கட்சி மட்டுமே. எனவே, ஒடிசாவின் நலன்களைப் பாதுகாக்க நாங்கள் எந்த எல்லைக்கும் செல்வோம். அதற்கான அறிவுரைகளை எங்களுக்கு நவீன் பட்நாயக் வழங்கியுள்ளார் என்றார்.
பிஜுஜனதாதளத்தின் இந்த முடிவால், மாநிலங்களவையில் சட்டங்களை நிறைவேற்ற பாஜக கூட்டணி அரசால் இயலாது என்று சொல்லப்படுகிறது.