மகாராட்டிரா மாநகராட்சிப்பள்ளிகளில் 10-ம் வகுப்பு வரை தமிழ் வழிப்பாடம்- முதலமைச்சர் பட்னாவிஸ் பேச்சு

மாநகராட்சி பள்ளிகளில் 10-ம் வகுப்பு வரை தமிழ் வழிப்பாடத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழர் பண்பாட்டு திருவிழாவில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பேசினார்.

மராட்டிய மாநில தமிழர் நல கூட்டமைப்பு சார்பில் தமிழர் பண்பாட்டு திருவிழா கிங் சர்க்கிள் பகுதியில் உள்ள சண்முகானந்தா அரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. விழாவில் மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டார். அவருக்கு ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டு நினைவு பரிசு வழங்கப்பட்டது. தமிழர் கூட்டமைப்பு தலைவர் கேப்டன் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். புனே பாலாஜி சொசைட்டி தலைவர் கர்னல் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் விவேக், மும்பை பா.ஜனதா தலைவர் ஆசிஷ் செலார், மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் டாக்டர் அன்பழகன், தஞ்சை இளவரசர் எஸ்.பாபாஜி ராஜா போஸ்லே, எழுத்தாளர் நாஞ்சில் நாடன், நேஷனல் எஜூகேசன் சொசைட்டி நிறுவனர் வரதராஜன், எஸ்.ஐ.இ.எஸ். தலைவர் சங்கர், பம்பாய் திருவள்ளுவர் மன்ற செயலாளர் தேவதாசன் ஆகியோர் பங்கேற்றனர்.

இதைத் தொடர்ந்து முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தனது பேச்சை தமிழில் தொடங்கினார். அனைவருக்கும் வணக்கம், நல்லா இருக்கிறீர்களா? தமிழர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்.. என்று அவர் தமிழில் பேசியபோது அரங்கில் அமர்ந்திருந்த மக்கள் விண்ணை முட்டும் அளவிற்கு கரகோஷம் எழுப்பினர். மராட்டிய மண்ணில் பிறந்த எனக்கு தமிழ் மொழி மீது அதிக ஈடுபாடு உண்டு. ஏனெனில் நாக்பூரில் உள்ள சவுத் இந்தியன் எஜூகேசன் பள்ளியில் நான் படித்தபோது, அங்கு அதிகமாக ஆசிரியர்கள் தமிழர்கள் தான். அவர்கள் வழங்கிய ஆசியால் தான் தற்போது முதல்-மந்திரியாக உங்கள் முன் நிற்கிறேன். தமிழ் மகனாகிய தமிழ்ச்செல்வன் எனக்கு நண்பனாக கிடைத்து இருப்பதற்கு நான் மிகவும் பெருமை அடைகிறேன். அவர் வறட்சியால் பாதிக்கப்பட்ட மராட்டிய மக்கள் மற்றும் சென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கியது மிகவும் பெருமை அடைய வைக்கிறது. அவரது நற்பணிகள் தொடரட்டும். தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. என்னிடம் விடுத்த கோரிக்கைகளில் தமிழ்நாடு பவன் கட்டித்தர பரிந்துரை செய்யப்படும். மாநகராட்சி பள்ளிகளில் 10-ம் வகுப்பு வரை தமிழ்வழிப்பாடம் செயல்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். தாராவி சயான் கோலிவாடா பகுதி குடிசைவாசி மக்கள் அனைவருக்கும் 2022-ம் ஆண்டுக்குள் வீடுகள் ஒதுக்கி தரப்படும். மேலும் குடிசைவாழ் மக்களை ஏமாற்றும் கட்டுமான அதிபர்கள், கமிட்டி உறுப்பினர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

இதனை தொடர்ந்து நடிகர் விவேக் பேசுகையில், ‘‘முதன் முதலாக மராட்டிய முதல்-மந்திரி தமிழர்களின் கலாசார விழாவில் கலந்துகொண்டதை கண்டு நான் மிகவும் பெருமை அடைந்தேன்” என்றார்.

முன்னதாக கூட்டமைப்பு அமைப்பாளர் அனிதா டேவிட் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார். லெமுரியா பத்திரிகை ஆசிரியர் குமணராசன் வரவேற்று பேசினார். மா.கருண் தொடக்கவுரை ஆற்றினார். மேலும் அமைப்பாளர்கள் ராஜேந்திரன் சுவாமி, வெ.குமார் வாழ்த்துரை வழங்கினர்.

இதனை தொடர்ந்து பல்வேறு துறைகளில் சாதனை படைத்த சாதனையாளர்களை கவுரவிக்கும் வகையில் பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டது. மேலும் மும்பையில் சமூகத்தில் நலிவடைந்த மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழக மக்களின் கிராமிய கலைக்குழுவினர் பங்கேற்ற கண்ணை கவரும் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

விழாவில் தலைமை ஆலோசகர்கள் கே.வி.அசோக்குமார், பி.எஸ்.பட்டத்தேவர், ஐயப்பன்பிள்ளை, பி.பி.முத்து, தொழில் அதிபர்கள் பாக்கியநாதன், முத்துசாமி, ஒருங்கிணைப்பாளர்கள் ச.சி.தாசன், பழனி, சட்ட ஆலோசகர்கள், மும்பையின் பல்வேறு தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

விழாவின் இறுதியில் அமைப்பாளர் அங்கப்பன் நன்றி தெரிவித்தார். இந்த விழாவை அமைப்பாளர் கராத்தே முருகன் ஒருங்கிணைத்தார்.

 

Leave a Response