விடுதலைப்புலிகள் இல்லாததால் தமிழீழத்தில் போதைப்பொருள் புழக்கம் – ஐங்கரநேசன் அதிர்ச்சித் தகவல்

இலங்கை முன்னெப்போதும் சந்தித்திராத பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்துக் கொண்டிருக்கிறது. சிங்கள மக்களைப் போன்றே தமிழ்மக்களும் பெரும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், யுத்த காலத்தில் பாரிய நெருக்கடிகளுக்குப் பழக்கப்பட்டுவிட்டோம் என்ற மனோநிலையில் இருக்கும் தமிழ்மக்கள் இந்தப் பிரச்சினைகளை அவற்றின் பாரதூரம் புரியாமல் இலகுவாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

யுத்த காலத்தில் தமிழ் மக்களை வழிப்படுத்த விடுதலைப்புலிகள் இருந்தார்கள். ஆனால், நெருக்கடி காலங்களில் வழிகாட்டுவதற்குத் தமிழர்களுக்கு இப்போது ஒரு தலைமை இல்லை. இப்போதைய நெருக்கடிச் சூழலை நாம் சரியான முறையில் கூட்டாக எதிர்கொள்ளத் தவறினால் தமிழினம் பாரிய எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார்.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அறிவொளி நிகழ்ச்சித் திட்டம் நேற்று திங்கட்கிழமை (23.05.2022) நாவற்குழியில் முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த பெற்றோர்களினதும் மாணவர்களினதும் மத்தியில் உரையாற்றும்போதே பொ.ஐங்கரநேசன் இவ்வாறு எச்சரித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
தமிழ் மக்களின் பெரும் மூலதனம் கல்வி ஒன்றுதான். இதனாலேயே யுத்த நெருக்கடிகளின் மத்தியிலும் விடுதலைப்புலிகள் கல்விக்கென்று தனியானதொரு பிரிவை உருவாக்கி மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் கூடிய சிரத்தை எடுத்திருந்தார்கள். இடப்பெயர்வுகளின் மத்தியில் குப்பி விளக்குகளில் படித்தும்கூட மாணவர்களால் சிறந்த பெறுபேறுகளை எட்டக்கூடியதாக இருந்தது. ஆனால், இப்போது தமிழ்மக்கள் தொடர்ந்து கல்வியில் வீழ்ச்சியையே சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

விடுதலைப்புலிகள் காலத்தில் இருந்த இறுக்கமான கட்டுப்பாடுகள் இப்போது இல்லாத நிலையில் வன்முறைகளுக்கும் போதைப் பொருள் பாவனைக்கும் மாணவர்கள் திட்டமிட்டுப் பழக்கப்படுகிறார்கள். இந்தத் திசைதிருப்புதல்களுக்கும் மேலாக, கொரோனாப் பெருங்கொள்ளை நோயால் பல மாதங்களாகப் பாடசாலைகள் மூடப்பட்டதாலும் மாணவர்கள் கல்வியில் பெரும் பின்னடைவைச் சந்தித்தார்கள். இவற்றுடன் இப்போது நாட்டின் பொருளாதாரச் சீர்குலைவும் கல்வியைப் பாதித்துக் கொண்டிருக்கிறது.

போரின் பாதிப்புகளில் இருந்து மீண்டெழ முடியாமல் இருக்கும் தமிழ் மக்களைப் பொருட்களின் உச்ச விலையேற்றம் கடுமையாகப் பாதிக்கத் தொடங்கியுள்ளது. வறுமை கல்வியை மோசமாகப் பாதிக்கும். ஏழைக் குடும்பங்கள் மாணவர்களை வேலைக்கு அனுப்புகின்ற சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எந்தக் கடுமையான சூழ்நிலையிலும் எதற்காகவேனும் பிள்ளைகளின் கல்வியை நாம் பலியிட்டுவிடக்கூடாது. இவ்விடயத்தில் தமிழ்த்தேசியம் பேசிக்கொண்டிருக்கும் அனைவரும் உடனடியாகக் கரிசனை கொள்ளவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Response