கர்நாடகத்தில் வாழும் தமிழர்கள் கன்னடம் பயிலவேண்டும்- பெங்களூரு மேயர் பேச்சு

பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் சார்பில் பெங்களூரு, தமிழ்ச் சங்க வளாகம், திருவள்ளுவர் அரங்கில் சனிக்கிழமை நடந்த 60-ஆவது கர்நாடக உதய தின விழாவில்

சிறப்பு விருந்தினராக பெங்களூரு மாநகராட்சி மேயர் என்.மஞ்சுநாத் ரெட்டி

பங்கேற்றார் அவர் பேசியது:

 பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் சார்பில் கர்நாடக உதய தினம் கொண்டாடப்படுவது கன்னட மக்களுக்கு பெருமை அளிக்கக் கூடியதாகும். பெங்களூரில் பலமொழி பேசும் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அரசியல் காரணங்களுக்காக சில நேரங்களில் மொழி பற்றி பேசப்படுகிறது. கர்நாடகத்தில் குறிப்பாக, பெங்களூரில் வாழ்ந்துவரும் கன்னடர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே நிலவும் சம்பந்தம் நீண்ட நெடிய வரலாறு கொண்டதாகும். பெங்களூரில் தமிழர்கள் பல்லாண்டு காலமாக வாழ்ந்து வருவதோடும், இந்த மண்ணோடும் மக்களோடும் ஒன்றி வாழ்ந்து வருகின்றனர்.

  தமிழகத்தை மூலமாகக் கொண்டிருந்தாலும், பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கர்நாடகத்தை பிறப்பிடமாகக் கொண்டுள்ளனர். காவிரி நதிநீர்ப் பங்கீடு விவகாரத்தில் அவ்வப்போது கர்நாடகத்துக்கும் தமிழகத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டாலும், இங்குள்ள தமிழர்கள் கர்நாடகத்துக்கு ஆதரவாக இருந்துள்ளனர். காவிரிக்காக நடந்த போராட்டங்களிலும் தமிழர்கள் அதிகளவில் பங்குகொண்டு, கர்நாடகத்தின் உரிமைக் குரலாக இருந்துள்ளனர்.

  கன்னடர்களும் தமிழர்களும் சகோதரர்களைப் போல வாழ்ந்து வருகின்றனர். அதேபோல, பெங்களூருவை கட்டமைப்புக்கும் பணியில் கன்னடர்களும் தமிழர்களும் இணைந்து பங்காற்றுவோம். கர்நாடகத்தில் கன்னடம் ஆட்சிமொழியாக இருப்பதாலும், வேலைவாய்ப்பில் கன்னடம் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாலும் தமிழர்கள் கன்னடம் பயில வேண்டும் என்றார் அவர்.

விழாவில், சங்கத் தலைவர் கோ.தாமோதரன், துணைத் தலைவர் தி.கோ.தாமோதரன், செயலாளர் வா.ஸ்ரீதரன், பொருளாளர் மு.சம்பத், பேராசிரியர் எஸ்.கே.சாந்தமூர்த்தி, கிரிஸ்ப் அமைப்புத் தலைவர் குமார் ஜாகிர்தார் கலந்துகொண்டனர்.

 தேசியக் கவிஞர் கனகதாசர் பயிற்சி ஆய்வு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் கே.டி.சிக்கண்ணாவுக்கு கன்னடம்-தமிழர் நல்லுறவு உயர் விருதை மேயர் மஞ்சுநாத் ரெட்டி வழங்கி கெளரவித்தார். சங்கத்தின் மூத்த உறுப்பினர்கள் வேதகுமார், வி.தேவராஜ், கி.சி.தென்னவன், ஏ. ராமமூர்த்தி, புதுமைக்கோமான் ஆகியோரை சங்கத் தலைவர் கோ.தாமோதரன் பாராட்டி கெளரவித்தார்.

Leave a Response