எஸ்.வி.சேகர் மீது வழக்குப் பதிவு – இம்முறையாவது கைது செய்யப்படுவாரா?

தேசியக்கொடியை அவமதித்ததாக நடிகரும், பாஜக கட்சி பிரமுகருமான எஸ்.வி. சேகர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பா.ஜ.க – வைச் சேர்ந்த எஸ்.வி. சேகர், அவருக்கு சொந்தமான யூ – டியூப் சேனலில் சமீபத்தில் அதிமுக அரசை விமர்சித்து காணொலி வெளியிட்டிருந்தார். இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்திருந்தனர். வழக்கு போட்டால் ஓடி ஒளிந்துகொள்வார் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார். இந்த நிலையில், மீண்டும் அரசு மற்றும் முதல்வர் குறித்து எஸ்.வி சேகர் காணொலி ஒன்றை வெளியிட்டார்.

அந்த காணொலியில் காவி நிறம் களங்கம் என்றால் தேசியக் கொடியில் ஏன் காவி நிறம் என்கிற வகையில் பேசியிருந்தார். மேலும், ‘காவியை களங்கம் என குறிப்பிடும் தமிழக முதல்வர் களங்கமான தேசியக் கொடியை தான் ஆகஸ்டு 15 ஆம் தேதி ஏற்றப்போகிறாரா? தேசியக்கொடியில் உள்ள காவியை வெட்டி விட்டு வெள்ளை மற்றும் பச்சை நிறம் கொண்ட கொடியை ஏற்றுகிறாரா ? தேசியக் கொடியில் உள்ள 3 நிறங்களும் 3 மதத்தினரை குறிக்கும்.’ என்று தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் அந்த காணொலிப் பதிவை ஆதாரமாக வைத்து அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜரத்தினம் என்பவர் இணையம் மூலமாக புகார் ஒன்றினை அளித்திருந்தார்.

இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் எஸ்.வி. சேகர் மீது வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள். தேசிய கவுரவ பாதுகாப்புச் சட்டம் மற்றும் தேசிய சின்னங்கள் அவமதிப்பைத் தடுக்கும் சட்டம் ஆகியவற்றின் கீழ் எஸ்.வி. சேகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த வழக்கில் தண்டனை உறுதியானால் 3 வருடம் வரை கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என்று சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஆனால் அவரை தமிழகக் காவல்துறை கைதாவது செய்யுமா? என்பதே மக்களின் கேள்வியாக இருக்கிறது.

ஏனெனில் இரண்டாண்டுகளுக்கு முன்பு, எஸ்.வி.சேகர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து இழிவான கருத்துகளைப் பதிவு செய்தார். இதில் இடம்பெற்ற கருத்துகள் ஊடகத்துறையில் பணி புரியும் பெண் செய்தியாளர்களை மிகவும் இழிவு படுத்தும் விதமாக இருந்தது. மேலும் ஆளுநருக்கு எதிர்ப்புத்தெரிவித்திருந்த பெண் பத்திரிகையாளரையும் மிகவும் இழிவுப்படுத்தி எழுதியிருந்தார்.

இதையடுத்து எஸ்.வி.சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் பிரிவு போலீஸார் இந்திய தண்டனைச்சட்டம் 504(பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுதல்), 505(1)(c)(குறிப்பிட்ட சமூகத்திற்கு, தனி மனிதருக்கு எதிராக குற்றம் செய்ய தூண்டிவிடுதல்), 509( வலைதளங்களில் பெண்களை அவமானப்படுத்தும் வகையில் பதிவிடுதல்) IPC and sec. 4 of Tamilnadu prohibition of women act.( பெண் வன்கொடுமை சட்டப்பிரிவு ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஆனால் அவரை காவல்துறை கைது செய்யவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response