சிங்கள பிரதமர் ரணிலின் இந்திய வருகைக்கு கர்நாடகத்தில் எதிர்ப்பு

இலங்கை பிரதமர் ரணில் விக்ரம சிங்கே இந்தியா வருவதற்கு கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அதன் இயக்கச் செயலாளர் ப.அரசு வெளியிட்ட அறிக்கை:

2009-ஆம் ஆண்டில் இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் அந்த நாட்டு ராணுவம் 1.5 லட்சம் தமிழர்களைக் கொன்றது. இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றத்தை விசாரிக்க சர்வதேச விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என்று ஐ.நா. விசாரணைக் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஐநாவின் கருத்துக்கு மாறாக, போர்க்குற்றம் புரிந்த இலங்கை அரசே அதுகுறித்து விசாரித்துக் கொள்ளலாம் என்று அமெரிக்கா கூறியுள்ளது. ஈழத் தமிழர்களுக்கு அமெரிக்கா துரோகம் இழைத்துள்ளது.

அமெரிக்காவின் நிலையை சாதகமாக்கிக் கொண்டு, சர்வதேச போர்க்குற்ற விசாரணையை தவிர்ப்பதற்காக இந்தியாவின் ஆதரவைப் பெற இலங்கை பிரதமர் ரணில் விக்ரம சிங்கே  செப்.14-இல் இந்தியா வருகிறார்.

இதை கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. போர்க்குற்றத்தை மறைக்க இலங்கை நடத்தும் நாடகங்களுக்கு இந்தியா ஒத்துழைக்கக் கூடாது. போர்க் குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும்.

இதை வலியுறுத்தி பெங்களூரு டவுன்ஹால் எதிரே ஞாயிற்றுக்கிழமை (செப்.13) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Leave a Response