மின்கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிப்பு – மின்சாரவாரியம் அறிவிப்பு

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், மின் கட்டணம் மற்றும் இதர நிலுவைத் தொகை செலுத்துவதற்கான இறுதி நாள் மாா்ச் 25 முதல் ஏப்ரல் 14 வரை உள்ள தாழ்வழுத்த மின் பயனீட்டாளா்கள் ஊரடங்கு அமல்படுத்தியதன் காரணமாக, தாமதக் கட்டணம் மற்றும் மின் துண்டிப்பு அல்லது மறு இணைப்புக் கட்டணமின்றி மே 6 ஆம் தேதி வரை செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஊரடங்கு மே 17 வரை நீட்டிக்கப்பட்டது.அதனால், மே 6 ஆம் தேதிக்குள் மின் கட்டணம் இறுதிக் கெடுவை இரத்து செய்யக்கோரி பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

அவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் மே 18 ஆம் தேதி வரை மின் கட்டணம் செலுத்தவில்லை என்றாலும், தாழ்வான மின் இணைப்புகளை துண்டிக்கக் கூடாது என்று உத்தரவிட்டனர். மேலும், மின் கட்டணம் செலுத்தக் கால அவகாசம் அளித்து அரசு முடிவு எடுக்க அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், தாழ்வழுத்த மின் கட்டணம் செலுத்த மே 22 ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்படுவதாக தமிழக மின்சார வாரியம் அறிவித்தது.

இப்போது மீண்டும் ஊரடங்கு மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இப்போது, தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்….

மார்ச் 25 ஆம் தேதியில் இருந்து வருகிற ஜூன் 5 ஆம் தேதி வரை மின்கட்டணம் செலுத்த கடைசி தேதி உள்ள தாழ்வழுத்த மின்சார நுகர்வோர்கள் தங்களது மின்சார இணைப்பிற்கான கட்டணத்தை வருகிற ஜூன் 6 ஆம் தேதி வரை தாமத கட்டணம் மற்றும் மறு மின் இணைப்பு கட்டணமின்றி செலுத்தலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response