தமிழக அரசின் செயல் மனிதநேயமற்றது – பழ.நெடுமாறன் கண்டனம்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன் வேலூர் மத்திய ஆண்கள் சிறையிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் சிறைடிலும் அடைக்கப்பட்டுள்ளனர். 28 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வரும் இருவரும் விடுதலை செய்யக்கோரி மத்திய, மாநில அரசுகளுக்குக் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

இதற்கிடையே முருகனின் தந்தை வெற்றிவேல் (வயது 75) புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருடைய உடல்நிலை மோசமானது.

அதையடுத்து முருகனின் வழக்குரைஞர் புகழேந்தி தமிழக முதலமைச்சர், முதன்மைச் செயலாளர், சிறைத்துறை டி.ஜி.பி., ஐ.ஜி., வேலூர் சிறைத்துறை காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்குக் கோரிக்கை கடிதம் அனுப்பினார். அதில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறக்கும் தருவாயில் முருகனின் தந்தை வெற்றிவேல் மருத்துவமனையில் உள்ளார். எனவே தந்தையை வீடியோகால் மூலம் முருகன் பார்க்க அனுமதிக்க வேண்டும். இதுதொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். ஆனால் இந்த கடிதத்தின்பேரில் முருகனை வீடியோகால் மூலம் தந்தையைப் பார்க்க அனுமதி கொடுக்கவில்லை. அதனால் முருகன் மிகவும் மனவேதனையுடன் காணப்பட்டார்.

இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வெற்றிவேல் ஏப்ரல் 27 அன்று உயிரிழந்தார். அவரின் உடல் நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு அடக்கம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதுகுறித்து முருகன், நனிளி ஆகியோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைக் கேட்ட இருவரும் கதறி அழுதுள்ளனர். அதைத்தொடர்ந்து முருகன், சிறை அதிகாரிகளிடம், உயிரிழந்த தந்தையின் முகத்தை கடைசியாக ஒருமுறை பார்க்க அனுமதிக்க வேண்டும் என்று உருக்கமாகக் கோரிக்கை வைத்துள்ளார். அதேபோன்று நளினியும் தனது மாமாவின் முகத்தை வீடியோகால் மூலமாக பார்க்க அனுமதிக்கக் கோரிக்கை விடுத்து உள்ளார். ஆனால் கடைசிவரை அனுமதி வழங்கப்படவில்லை என்று வழக்குரைஞர் புகழேந்தி தெரிவித்தார்.

இதற்கு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்…..

இலங்கையில் உயிரிழந்த தனது தந்தையின் உடலை காணொளிக் காட்சியின் மூலம் காண்பதற்கு கூட முருகனுக்கு அனுமதி மறுக்கப்பட்ட செயல் மனித நேயமற்றதாகும். இத்தகைய துயரகரமான சூழ்நிலையில் சிறைவாசிகளுக்கு பரோல் விடுதலை அளிப்பதற்கு சட்டம் அனுமதிக்கிறது. முருகன் இலங்கைக்குச் செல்வதை சிறை நிர்வாகம் அனுமதிக்க இயலாது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

இந்த நிலையில் குறைந்த பட்சம் காணொளிக் காட்சி மூலம் அவரது தந்தையின் முகத்தை இறுதியாகப் பார்ப்பதற்குக் கூட அனுமதிக்க மறுத்திருப்பது மிகக் கொடுமையானது. கடந்த 28 ஆண்டு காலத்திற்கும் மேலாக சிறையில் வாடி வரும் முருகனுக்கு தாங்கொணாத துயரத்தை இது அளித்திருக்கும். அறிவியல் வளர்ந்தோங்கியிருக்கும் இந்தக் காலக்கட்டத்தில் கூட இது போன்ற கொடுமைகள் இழைக்கப்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

மிக நீண்ட காலமாக சிறையில் வாடி வரும் 7 பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை முடிவு செய்த போதிலும் ஆளுநர் அனுமதித் தராமல் கால தாமதம் செய்து வருகிறார். கொரோனா தொற்று நோய் பரவி வரும் கட்டத்தில் சிறைவாசிகள் பலர் தொடர்ந்து விடுதலை செய்யப்பட்டு வரும் சூழ்நிலையில் எழுவரையும் மற்றும் நீண்ட காலமாக சிறையில் இருக்கும் முஸ்லிம் சிறைவாசிகள் அனைவரையும் உடனடியாக விடுவிக்கும்படி தமிழக அரசை வேண்டிக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response