கர்ப்பிணி மனைவி 4 வயது மகனை கொன்று தொழிலதிபர் தற்கொலை – தொடரும் சோகம்

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஓம்பிரகாஷ் (வயது 38). இவருடைய மனைவி நிகிதா (28), மகன் ஆர்ய கிருஷ்ணா (5). ஓம்பிரகாசின் தந்தை நாகராஜூ பட்டாச்சார்யா (70), தாய் ஹேமலதா (55). ஓம்பிரகாஷ் தனது குடும்பத்துடன் மைசூரு தட்டஹள்ளி பகுதியில் வசித்து வந்தார்.

இவர் மைசூரு விஜயநகர் பகுதியில் அனிமேஷன் மற்றும் டேட்டா பேஸ் நிறுவனத்தை நடத்தி வந்தார். தொழில் அதிபரான இவர், தனது நிறுவனத்தை விரிவாக்கம் செய்வதற்காக பலரிடம் பல இலட்ச ரூபாய் கடன் வாங்கி உள்ளார்.

ஆனால் அந்தத் தொழிலில் அவருக்கு நட்டம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதனால் அவர் வாங்கிய கடனை திரும்பச் செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்தார். மேலும் கடன் கொடுத்தவர்கள் பணத்தைத் திரும்பக் கேட்டு தொந்தரவு செய்து வந்ததாகத் தெரிகிறது. இதன்காரணமாக ஓம்பிரகாஷ் மனமுடைந்து காணப்பட்டார்.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஓம்பிரகாஷ் தனது குடும்பத்துடன் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டைக்கு சுற்றுலா சென்றார். அங்கு எலச்செட்டி கிராமத்தில் உள்ள தனது நண்பருக்கு சொந்தமான பண்ணை வீட்டுக்குச் சென்று தங்கியிருந்தார். பின்னர் அவர்கள் குண்டலுபேட்டையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர். அவர்களுடன் ஓம்பிரகாசின் நண்பர்களான சேத்தன் மற்றும் சுரேஷ் ஆகியோரும் இருந்துள்ளனர்.

அவர்கள் நேற்று முன்தினம் பந்திப்பூர் வனப்பகுதிக்கு சென்று சுற்றி பார்த்துள்ளனர். அதன்பின்னர் மீண்டும் தங்கும் விடுதிக்கு வந்து தங்கினார்கள். அப்போது, ஓம்பிரகாஷ் தனது நண்பர்களான சேத்தனையும், சுரேசையும் மைசூருக்கு செல்லும்படி அனுப்பி வைத்துவிட்டார். அவர்களும் அங்கிருந்து திரும்பிச் சென்றுவிட்டனர்.

இதையடுத்து, ஓம்பிரகாஷ் நேற்று அதிகாலை 3 மணி அளவில் தனியார் தங்கும் விடுதியை காலி செய்துவிட்டு குடும்பத்துடன் குண்டலுபேட்டை டவுனை ஒட்டி உள்ள வனப்பகுதிக்கு சென்றுள்ளார்.

அப்போது, தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தாலும், கடன் தொல்லையாலும் தான் தினம், தினம் நரக வேதனை அடைந்து வருவதாகவும், அதனால் வாழ்வதை விட சாவதே மேல் என்றும் தனது குடும்பத்தினரிடம் கூறிய ஓம்பிரகாஷ், குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். அதற்கு அவருடைய குடும்பத்தினரும் சம்மதித்ததாகத் தெரிகிறது.

இந்த நிலையில், ஓம்பிரகாஷ் தன்னுடைய நண்பருக்கு போன் செய்து, ‘நான் தோற்றுவிட்டேன். நான் நம்பியவர்கள் என்னை கைவிட்டுவிட்டனர். இதனால் நாங்கள் தற்கொலை செய்துகொள்கிறோம். என்னுடைய கார், குண்டலுபேட்டை தனியார் தங்கும் விடுதி அருகே நிற்கிறது’ என்று கூறிவிட்டு போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

இதையடுத்து ஓம்பிரகாஷ் தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து, தனது மனதை கல்லாக்கிக் கொண்டு தந்தை நாகராஜூ பட்டாச்சார்யா, தாய் ஹேமலதா, மனைவி நிகிதா, மகன் ஆர்ய கிருஷ்ணா ஆகியோரை சுட்டார். இதில் குண்டுகள் அவர்களின் நெற்றியில் பாய்ந்தது. இதனால் 4 பேரும் அதே இடத்தில் இரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். பின்னர் அந்த துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு ஓம்பிரகாசும் தற்கொலை செய்துகொண்டார்.

ஓம்பிரகாசின் முடிவைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவருடைய நண்பர், குண்டலுபேட்டை காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். பின்னர் ஓம்பிரகாசின் செல்போன் சிக்னலை வைத்து குண்டலுபேட்டை காவல்துறை மற்றும் ஓம்பிரகாசின் நண்பர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு 5 பேரும் இரத்தவெள்ளத்தில் பிணமாகக் கிடந்தனர்.

இதையடுத்து காவல்துறையினர், 5 பேரின் உடல்களையும் கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக குண்டலுபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்த கைத்துப்பாக்கியையும் காவல்துறையினர் பறிமுதல் செய்து கொண்டனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து ஓம்பிரகாசின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் குண்டலுபேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். அப்போது 5 பேரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்களின் உடல்களைப் பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

இதுகுறித்து காவல்துறை நடத்திய விசாரணையில் கடன் தொல்லையால் ஓம்பிரகாஷ், மனைவி-மகன், தந்தை-தாய் ஆகிய 4 பேரையும் சுட்டுக் கொன்று தானும் தற்கொலை செய்துகொண்டதும், ஓம்பிரகாசின் மனைவி நிகிதா கர்ப்பமாக இருந்ததும் தெரிய வந்தது.

இதுகுறித்து குண்டலுபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

காஃபி டே சித்தார்த், கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் வரிசையில்
கர்நாடகாவில் ஒரு தொழிலதிபர் குடும்பத்தையே சுட்டுக்கொன்று தற்கொலை செய்துள்ளார். நல்ல தொழில் கூட நடத்துபவரின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி நஷ்டமடைகிறது. பங்குச் சந்தையோ தினமும் ரத்தகாவு வாங்குகிறது,

தொடரும் இதுபோன்ற தொடர் தற்கொலைகளுக்கு மோடி அரசின் மோசமான செயல்பாடுகளே அடிப்படைக் காரணம் என்று பொருளாதார நிபுணர்கள் சொல்கிறார்கள்.

Leave a Response