தமிழக அமைச்சர் திடீர் நீக்கம் – எடப்பாடி பழனிச்சாமி அதிரடி

தமிழக அமைச்சரவையில் இருந்து தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் எம்.மணிகண்டன் திடீரென நீக்கப்பட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்து வந்தவர் எம்.மணிகண்டன்.

மருத்துவரான இவர் இராமநாதபுரத்தைச் சேர்ந்தவர்.2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.

முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினர் ஆன இவரை ஜெயலலிதா அமைச்சராக நியமித்து, அவருக்குத் தகவல் தொழில்நுட்பத் துறையை வழங்கினார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சரவையிலும் மணிகண்டன் இடம்பெற்று இருந்தார். அதன்பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசிலும் மணிகண்டன் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்து வந்தார்.

இந்த நிலையில், அமைச்சர் பதவியில் இருந்து மணிகண்டன் நேற்று திடீரென்று நீக்கப்பட்டார்.

இதுகுறித்து ஆளுநர் மாளிகை நேற்று இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது…..

தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டனை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்ற முதல்வரின் பரிந்துரையை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஏற்றுக்கொண்டார்.

மேலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பரிந்துரையின்படி, தகவல் தொழில்நுட்பத் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம் ஒப்படைக்கப்படுகிறது. எனவே ஆர்.பி.உதயகுமார், வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

காரணம் என்ன?

மணிகண்டன் நேற்று காலையில் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கேபிள் கட்டணம், டிஜிட்டல் உரிமம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வசைபாடினார். அத்துடன், அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள உடுமலை ராதாகிருஷ்ணனையும் குற்றம்சாட்டி பேசினார்.

இதன் காரணமாகவே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மணிகண்டனை அமைச்சர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கியதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

மணிகண்டன், அ.தி.மு.க. மாநில மருத்துவ அணி துணைச் செயலாளராக உள்ளார். இவருடைய மனைவி வசந்தி மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

மணிகண்டனின் தந்தை சேனா முருகேசன் இராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவராக உள்ளார்.

அமைச்ச்ர் மணிகண்டன் நீக்கம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Leave a Response