திமுக கூட்டணி கட்சிக்கு விஜய் மக்கள் இயக்கம் ஆதரவு

2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரசு, மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை, கோவை ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் சு.வெங்கடேசன் போட்டியிடுகிறார்.

அதிமுக சார்பில் மதுரை மாவட்டச்செயலாளர் ராஜன் செல்லப்பாவின் மகன் ராஜ் சத்யன் களம் இறக்கப்பட்டுள்ளார்.

மதுரையின் மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் மதுரையில் பிரபலமானவர், இலக்கிய உலகில் பலராலும் அறியப்படுபவர் திமுக கூட்டணியின் பலமும் இருப்பதால் அவரது வெற்றி உறுதி செய்யப்பட்டு இருப்பதாகப் பலர் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனை விஜய் மக்கள் இயக்க மதுரை மாவட்டப் பொறுப்பாளர் எஸ்.ஆர்.தங்கப்பாண்டி தனது இயக்க நிர்வாகிகளுடன் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

இதன்மூலம் இளைஞர்களை அதிக அளவில் ரசிகர்களாகக் கொண்டுள்ள விஜய் ரசிகர்களின் கூடுதல் ஆதரவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குக் கிடைத்துள்ளது.

திமுக கூட்டணிக்கு ஆதரவு என்கிற விஜய் ரசிகர் மன்றத்தின் இந்த நிலைப்பாடு மதுரையில் மட்டுமா? அல்லது மாநிலம் முழுதுமா? என்பது தெரியவில்லை.

Leave a Response