பொள்ளாச்சி கொடூரத்தை வெளிப்படுத்திய நக்கீரன் கோபால் மீது வழக்கா? – வலுக்கும் கண்டனங்கள்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தன் மீது களங்கம் கற்பித்ததாக பொள்ளாச்சி ஜெயராமன் அளித்த புகாரின் பேரில் ஸ்டாலின் மருமகன் சபரீசன் மீதும், நக்கீரன் கோபால் மீதும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனராம்.

இந்தப் புகார் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அந்தப் புகாரின்பேரில் நக்கீரன்கோபால் மீதும், சபரீசன் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளதாக்வும் செய்திகள் வெளியாகின.

நக்கீரன் கோபால் நாளை காலை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று அவருக்கு சம்மனும் அனுப்பப்பட்டுள்ளதாக்வும் கூறப்படுகிறது.

இந்நிலையில்,

பொள்ளாச்சி ஜெயராமன் கொடுத்த புகாரின் அடிப்படையில் நக்கீரன் இதழ் ஆசிரியர் நக்கீரன்கோபாலை விசாரணைக்கு அழைத்த காவல்துறைக்கு தமிழ்நாடு- புதுச்சேரி பிரஸ்& மீடியா செய்தியாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தை நக்கீரன் இதழில் செய்தியாக வெளியிட்டது தொடர்பாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் நக்கீரன்கோபாலை நாளை (15-03-2019) காலை 11 மணிக்கு சென்னை பழைய கமிஷனர் அலுவலத்தில் ஆஜராகுமாறு
மத்தியக்குற்றப்பிரிவின் சைபர் கிரைம்
காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

புகார் கொடுத்த பெண்களின் பெயர் விபரங்களை இரகசியம் காக்கவேண்டிய மாவட்டக்காவல்துறையே அவர்களின் விபரங்களை ஊடகச்செய்தியாக வெளியிட்டு, பாலியல் கொடூரன்களால் பாதிக்கப்பட்டு புகார்கொடுக்கவரும் பெண்களை அச்சுறுத்தியது மட்டுமல்லாமல் விசாரணையையும் சரியாக செய்யவில்லை என்பதால்தான் வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.

ஆனால், இந்த விவகாரத்தில் ஆளுங்கட்சி புள்ளிகளின் தொடர்பு அதிகமாக இருப்பதாக கூறப்பட்டதால் தமிழக அரசு இந்த வழக்கை சி.பி.ஐ.விசாரணைக்கு மாற்றியது.

நக்கீரன் இதழ் வெளியிட்ட வீடியோ செய்திகள் தமிழகத்தில் மாபெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி குற்றவாளிக்கு எதிரான கண்டனங்களை பெருகச்செய்தது. நக்கீரன் உள்ளிட்ட அனைத்து ஊடகங்களிலும் வெளியான செய்திகள் குறித்து உண்மையா? பொய்யா? என்பதை விசாரிக்கவேண்டியது இனி சி.பி.ஐ.தான்,

ஒரு வழக்கில் குறுக்கீடு செய்தாலோ விசாரணைக்கு தடங்கல் ஏற்படுத்தினாலோ அது குற்றவாளிகளுக்கு உதவுவதாகத்தான் அர்த்தம். அதிமுக பிரமுகர் மகன்கள் உள்ளிட்டவர்களுக்கு தொடர்பு இருக்கிறதா? இல்லையா? என்பதை சி.பி.ஐ. விசாரிக்கப்போகும் சூழலில் அதுகுறித்து, செய்தி வெளியிட்டவர்களை அழைத்து விசாரணை செய்து ஆவணங்களை கைப்பற்றி, தடயங்களை அழிக்கும் முயற்சியிலும் இனி, அவர் குறித்த செய்திகள் ஊடகங்களில் வராமல் தடுப்பதற்கான முயற்சியிலும் சைபர்கிரைம் காவல்துறை செயல்படுவதுபோல் உள்ளது. மேலும், சி.பி.ஐ. விசாரணையில் குறுக்கீடு செய்வது குற்றவாளிகளுக்குத்தான் சாதகமாக அமையும்.

ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தப்பார்க்கிறார் என்று தோன்றுகிறது. நக்கீரனில் வெளியான செய்தி அவதூறாக இருந்தால் பொள்ளாச்சி ஜெயராமன் சட்டப்படி நீதிமன்றத்தை அணுகியிருக்க வேண்டும்.

அப்படியே, நக்கீரன் கோபால் மீதுபொள்ளாச்சி ஜெயராமன்
புகார் கொடுத்தாலும் அந்தப்புகாரை சி.பி.ஐ.க்குதான் அனுப்பவேண்டுமே தவிர, சைபர் கிரைம் விசாரிப்பதில் நியாயமில்லை.

அதனால், பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிராகவும் தமிழகத்தை உலுக்கிய பாலியல் கொடூரத்தை வெளிக்கொண்டுவருவதை தடுக்க முயற்சிக்கும் செயலுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

இது ஜனநாயகத்தின் நான்காவது தூணை நசுக்க என்றே தோன்றுகிறது, தற்போதுதான் நீதியரசர்கள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோரைக்கொண்ட அமர்வு, ‘தமிழ் நாட்டில் பத்திரிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான சூழல் இல்லை’ என்று தெரிவித்து இருந்தது. அதை, மெய்ப்பிக்கும் வகையில் தற்போது சூழல் அமைந்துள்ளது,

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது மட்டுமின்றி சமூக வலைதளங்களில் நக்கீரன் கோபாலுக்கு ஆதரவாகவும் அதிமுக அரசுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Response