நியூசிலாந்திடம் டி20 தொடரை இழந்தது இந்தியா – ரசிகர்கள் சோகம்

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மட்டைப்பந்தாட்ட அணி 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் விளையாடியது.

இதில் முதல் இரு போட்டியிலும் தலா ஒரு வெற்றி பெற்றதால் தொடர் 1-1 என சமநிலையில் இருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3 ஆவது மற்றும் கடைசி டி 20 போட்டி ஹாமில்டன் நகரில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணித் தலைவர் ரோகித் சர்மா பந்து வீசத் தீர்மானித்தார்.

இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு முன்ரோ- சேபெர்ட் ஜோடி அதிரடி துவக்கம் தந்தது. இருவரும் முதல் விக்கெட்டுக்கு 80 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் குல்தீப் பந்துவீச்சில் தோனியின் மின்னல் வேக ஸ்டம்பிங்கால் சேபெர்ட் 43 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த நியூசிலாந்து அணைத்தலைவர் வில்லியம்சன் பொறுமையாக விளையாட, முன்ரோ இந்திய அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார். இவர் 40 பந்துகளில் 72 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்களும் அதிரடி காட்டியதால் நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் குல்தீப் 2 விக்கெட்டுகளையும், கலீல், புவனேஸ்வர் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனையடுத்து 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்கமே சோகமாக அமைந்தது. துவக்க வீரர் தவான் 5 ரன்கள் எடுத்து முதல் ஓவரிலேயே நடையைக் கட்டினார். பின்னர் ரோகித்துடன் ஜோடி சேர்ந்த தமிழக வீரர் விஜய் சங்கர் நியூசிலாந்து பந்துவீச்சைப் பதம் பார்த்தார். அரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 43 ரன்களில் ஆட்டமிழந்தார் விஜய் சங்கர்.

பின்னர் வந்த ரிஷப் பண்ட் வந்த வேகத்தில் சிக்ஸர் பவுண்டரிகளுமாக விளாசி ரன் ரேட்டை உயர்த்தினார். 12 பந்தில் 28 ரன் விளாசிய நிலையில் பண்ட் ஆட்டமிழந்தார்.

அணித்தலைவர் ரோகித் சர்மா 38, பாண்டியா 21, தோனி 2 ரன் என அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் இந்திய அணி தடுமாறியது. பின்னர் வந்த தினேஷ் கார்த்திக்-க்ருனால் பாண்டியா ஜோடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்ல கடைசிவரை போராடினர். இருப்பினும் இந்தியாவால் 20 ஓவர்களில் 208 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்றது.

இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது.

இதனால் இந்திய மட்டைப்பந்தாட்ட ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Leave a Response