ஐபிஎல் – முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடனான ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஹோல்கர் ஸ்டேடியத்தில் மே 4 இரவு நடந்த போட்டியில், டாசில் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசியது.

கிங்ஸ் லெவன் தொடக்க வீரர்களாக கிறிஸ் கேல், கே.எல்.ராகுல் களமிறங்கினர். ராகுல் 24 ரன் எடுத்து (20 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்) மார்கண்டே பந்துவீச்சில் டுமினியிடம் பிடிபட்டார். கிறிஸ் கேல் 50 ரன் (40 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி கட்டிங் பந்துவீச்சில் சூரியகுமாரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

யுவராஜ் 14 பந்தில் 14 ரன் எடுத்து துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டாக, கருண் நாயர் 23 ரன் (12 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்), அக்சர் பட்டேல் 13, அகர்வால் 11 ரன்னில் பெவிலியன் திரும்பினர்.

கிங்ஸ் லெவன் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 174 ரன் குவித்தது. ஸ்டாய்னிஸ் 29 ரன் (15 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் அஷ்வின் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். மும்பை பந்துவீச்சில் மெக்லநாகன், பூம்ரா, மார்கண்டே, கட்டிங், ஹர்திக் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

தோற்றால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு முழுவதுமாக பறிபோய்விடும் என்ற நெருக்கடியுடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ், 19 ஓவரில் 4 விக்கெட்டை மட்டுமே இழந்து 176 ரன் எடுத்து வெற்றி பெற்றது.சூர்யகுமார் யாதவ் அதிகபட்சமாக 57 ரன் (42 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினார். கர்னால் பண்டியா 31 ரன், ரோகித் சர்மா 24 ரன் எடுத்தனர். சூர்யகுமார் யாதவ் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

Leave a Response